வீட்டுத் தோட்டங்களில் ரசாயன உரங்களைத் தவிர்த்து இயற்கை உரங்கள் மூலம் நச்சுத்தன்மையற்ற காய்கறி மற்றும் பழங்களைச் சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் வகையில் ‘வெற்றி இல்லத்தரசி’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டம் மூலம் ஊட்டச்சத்து பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு சுற்றுச்சூழல் மாசுபாடும் குறைகிறது. நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கிராமப்புற வீடுகளின் காலியிடங்களில் செங்குத்து தோட்டம் மற்றும் நீரியியல் தோட்டம் அமைத்து காய்கறிகள், பழங்கள், மூலிகைச் செடிகளை வளர்க்க இத்திட்டம் வழிவகுக்கிறது. இதற்காக நடப்பாண்டில் மாநில அரசு சார்பில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு ‘வெற்றி விவசாயி’ உள்ளிட்ட முக்கிய விருதுகள் அறிவிப்பு
விவசாயிகளின் உற்பத்தியைப் பெருக்கவும், அவர்களைக் கௌரவிக்கவும் மாவட்ட மற்றும் மாநில அளவில் பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன:
வெற்றி விவசாயி விருது:
நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், பருத்தி உள்ளிட்ட 9 பயிர்களை 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டு அதிக மகசூல் எடுக்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் ‘வெற்றி விவசாயி விருது’ வழங்கப்படும்.
முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக ரூ.25,000 வழங்கப்படும் மாநிலம் முழுவதும் மொத்தம் 90 பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இதற்காக ரூ.67.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் விருது:
மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டிகள் நடத்தப்பட்டு சிறந்த விவசாயிகளுக்கு அஞ்சலை அம்மாள் விருது வழங்கப்படுகிறது.
முதல் பரிசாக ரூ.2.50 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.1.50 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
போட்டிக்கான தகுதிகள்:
சிறு, குறு விவசாயிகள் கம்பு, கேழ்வரகு, துவரை, உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை ஆகியவற்றை குறைந்தபட்சம் 2 ஏக்கர் பரப்பளவிலும், தினை, சாமை, குதிரைவாலி, எள் ஆகியவற்றை குறைந்தபட்சம் 1 ஏக்கர் பரப்பளவிலும் சாகுபடி செய்திருக்க வேண்டும்.
நம்மாழ்வார் விருது:
மாநிலத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த உயிர்ம (இயற்கை) விவசாயம் செய்யும் 5 விவசாயிகளுக்கு ‘நம்மாழ்வார் விருது’ வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
