ஒரே நாளில் டெல்லி ‘சர்க்காருக்கு’ 2 கடிதங்களை அனுப்பிய முதல்வர் விஜய்

Published On:

| By Mathi

TN CM Vijay Sends 2 Letters to Union Govt. in a Single Day

நதிகள் இணைப்பு மற்றும் மீனவர்கள் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் விஜய் இன்று ஆகஸ்ட் 6-ந் தேதி கடிதங்களை அனுப்பி உள்ளார்.

நதிகள் இணைப்பு கடிதம்

தமிழக அரசின் செய்திக் குறிப்பு: கோதாவரி – காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த, ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகம் மற்றும் தேசிய நீர் மேம்பாட்டு முகமை ஆகியவற்றிற்கு உத்தரவிட வலியுறுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

ADVERTISEMENT

அக்கடிதத்தில் தமிழ்நாடு மாநிலம் இயல்பாகவே மேற்பரப்பு நீர் வளங்களில் பற்றாக்குறை கொண்டதாகவும், தனது நீர்த் தேவைகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமான அளவிற்கு அண்டை மாநிலங்களைச் சார்ந்தே உள்ளது. மாநில அரசினால் தொடர்ச்சியான ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும், நிலத்தடி நீர் வளமும் கவலைக்கிடமான கட்டத்தை எட்டும் அளவிற்குப் பயன்படுத்தப்பட்டு, பல பகுதிகளில் அது அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படும் நிலை தொடர்கிறது.

தமிழ்நாட்டின் மேற்பரப்பு வளங்களைப் பெருக்குவதற்கான மிக முக்கியமான நீண்டகால வாய்ப்பாக கோதாவரி – காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் திகழ்கிறது; தமிழ்நாட்டின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கான அதிகரித்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு இந்த திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் குறிப்பாக தென் மாவட்டங்களான, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகியவை தொடர்ந்து கடுமையான நீர்ப் பற்றாக்குறையுடனும், வறட்சியாலும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளன. அம்மாவட்டங்களின் அதிகரித்து வரும் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான மிகச்சிறந்த நிரந்தரமான தீர்வு கோதாவரி – காவிரி – வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவது.

இத்திட்டத்தினால் வெள்ள உபரிநீரை நீர்ப் பற்றாக்குறையாக உள்ள பகுதிகளுக்குத் திருப்பிவிட வழிவகுப்பாய் அமையும்.

ADVERTISEMENT

இப்பெரிய திட்டத்தின் முதற்கட்டமாக, தேசிய நீர் மேம்பாட்டு முகமை (NWDA), கோதாவரி – பெண்ணாறு – பாலாறு – வெள்ளாறு இணைப்புத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரித்துள்ளது.

இத்திட்டத்தினால் தெலங்காணா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களுக்குப் பயனளிக்கும்; தற்போது தயாரித்துள்ள விரிவான திட்ட அறிக்கைகளில் உள்ள சீரமைப்பு வழியானது, காவிரி ஆற்றிற்கு சில கிலோமீட்டர் முன்னதாகவே முடிவதால் அதற்குப் பதிலாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கோதாவரி -காவிரி – வைகை- வைப்பாறு- குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தேசிய நலனைக் கருத்திற்கொண்டு, ஆக்கப்பூர்வமான கலந்தாலோசனை மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தின் மூலம் மாநிலங்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து இத்திட்டத்தை நிறைவேற்ற முடியும்.

இத்திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் சமூகப்பொருளாதார நன்மைகளைக் கருத்திற்கொண்டு, கோதாவரி – காவிரி – குண்டாறு இணைப்பதற்கு திட்டத்தை விரைவாக செயல்படுத்திட, ”தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்” என்ற அந்தஸ்தை வழங்க வேண்டும்.

ஒருங்கிணைந்து செயல்படுத்துதல், உத்திரவாதமான நிதி ஒதுக்கீடு மற்றும் குறித்த காலத்தில் திட்டத்தை முடிப்பது ஆகிய நோக்கத்திற்காக ஒன்றிய அரசு மற்றும் பயன்பெறும் மாநிலங்களின் பங்குடன் ஒரு பிரத்யேக ”சிறப்பு அமைப்பு” உருவாக்குவது குறித்துப் பரிசீலிக்கலாம்.

இத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவதால் தமிழ்நாடு, தெலங்காணா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் மக்களுக்கு விவசாயிகளுக்கும் மிகவும் பயனளிக்கும்.

தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டத்தை விரைவாகவும் வெற்றிகரமாகாகவும் செயல்படுத்துவதற்குத் தேவையான முழு அர்ப்பணிப்பும் அனைத்து ஒத்துழைப்பும் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது.

எனவே, ஒன்றிய ஜல்சக்தி அமைச்சத்திற்கும் தேசிய நீர் மேம்பாட்டு முகமைக்கும் (NWDA) பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.

  • தொடர்புடைய பயன்பெறும் மாநிலங்களுடன் ஆலோசனைகளை விரைவுபடுத்தி, நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு விரைவான உடன்பாட்டை ஏற்படுத்த வேண்டும்;
  • காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கட்டளைக் கதவுகளை வரை இந்த இணைப்பை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) இறுதி செய்யப்பட வேண்டும்;
  • இத்திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக விரைவான முறையில் (Fast Track Method) செயல்படுத்த நடவடிக்கைக் எடுத்தல்
  • இத்திட்டத்தை ஒருங்கிணைந்த மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செயல்படுத்திட ஒரு சிறப்பு அமைப்பை உருவாக்குதல்; தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவித்தல்.

இத்திட்டம் தொடர்பாக பிரதமர் மோடி, தனிப்பட்ட கவனம் செலுத்தி, தென்னிந்தியாவின் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு நீண்டகால நீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், நமது நீர் வளங்களை சமமாகவும் நிலையான முறையிலும் பயன்படுத்துவது என்ற தேசிய குறிக்கோளை நோக்கி முன்னேக்கிச் செல்வதற்கும் கணிசமான பங்களிப்பை வழங்க வேண்டும். இவ்வாறு முதல்வர் விஜய் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மீனவர் விடுதலை

இதேபோல இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் இன்று கடிதம் அனுப்பி உள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share