பெண் செய்தி வாசிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பங்குச் சந்தை நிபுணர் பி.ஆர்.சுந்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தொழிலதிபர் பி.ஆர் சுந்தர்.
இவர் மீது தனியார் செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வரும் பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்திருந்தார்.
அதில், ’வேலைக்காக பி.ஆர்.சுந்தரிடம் கேட்டிருந்தேன். இதன் அடிப்படையில் இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் பி.ஆர்.சுந்தர் அவரது வீட்டுக்கு வரவழைத்து அநாகரிகமாக நடந்து கொண்டார். இது குறித்து அவரது மனைவியிடம் தெரிவித்த போது அவர் கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் மன்னிப்பு கேட்பதாக கூறி பி.ஆர் சுந்தர் அவரது அலுவலகத்திறகு வரவழைத்து ஒரு அறையில் பூட்டி வைத்து பாலியல் தொல்லை மற்றும் கொலை மிரட்டல் விடுத்தார்’ என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த புகாரின் அடிப்படையில் ஐஸ் ஹவுஸ் போலீசார் பி.ஆர் சுந்தர் மீது பாலியல் தொல்லை, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், மிரட்டல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விவகாரத்தில் பி.ஆர். சுந்தருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி அவரது மனைவி மங்கையர்கரசி மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
பெங்களூருவில் இருந்த பி.ஆர் சுந்தர் மற்றும் அவருடைய மனைவியை தனிப்படை போலீசார் இன்று கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதற்கிடையே பி.ஆர்.சுந்தர் நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில், ”சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு குடியிருப்பின் சொத்து, Mansun கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது. அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளேன். அந்த சொத்தில் தற்போது தமிழ்நாடு காவல்துறையில் காவல் கண்காணிப்பாளராக தொழில்நுட்ப சேவை பிரிவில் பணியாற்றி வரும் அன்புச் செழியன் வசித்து வருகிறார். சட்டபூர்வ அனுமதி இன்றி தங்கி வருகிறார்.
பலமுறை கேட்டும் சொத்தை காலி செய்து ஒப்படைக்க மறுத்துவிட்டார்.
இது தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டது.
ஆனால் இதுவரை இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் விளைவாகத்தான் தன்னை குறிவைத்து திட்டமிட்டு இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சூழலில் பி ஆர் சுந்தர் கைதுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ஆட்சி நிர்வாகத்தை விமர்சித்ததற்காக பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகர் பி.ஆர்.சுந்தர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு, அரசியல் பழிவாங்கல் நோக்கோடு வழக்குத் தொடுத்து, கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல்பாடு மிக மோசமான நிர்வாக நடவடிக்கையாகும்.
தனிநபர் பகை தீர்க்க, மக்களுக்காக இயங்க வேண்டிய அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் முதல்வர் விஜய்யின் போக்கு வெளிப்படையான அதிகார முறைகேடாகும்.
அரசையோ, அரசியல் இயக்கத்தையோ விமர்சித்துப் பேசுவதற்கு அரசியலமைப்புச்சட்டம் வழங்கியிருக்கும் கருத்துரிமை என்பது மிக மிக அடிப்படையான சனநாயக உரிமையாகும்.
அந்த அடிப்படை உரிமையையே முற்றாக மறுக்கும் வகையில், அதிகாரத்தைக் கொண்டு வழக்குகளைத் தொடுத்து அச்சுறுத்துவதும், மிரட்டுவதுமான அதிகார முறைகேட்டினை கடுமையாக எதிர்க்கிறேன்.
ஆகவே, பி.ஆர்.சுந்தர் மீது உண்மைக்குப் புறம்பாகத் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளைத் திரும்பப் பெற்று, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென” வலியுறுத்தியுள்ளார்.
