கொலையாளி வீசிய செல்ஃபி.. பதறிய வாட்ஸ்அப் குரூப்! பொள்ளாச்சி கொலையில் பின்னணி என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில், உடன் தங்கியிருந்த நண்பனை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, சடலத்துடன் செல்ஃபி எடுத்து சக நண்பர்களுக்கு அனுப்பிவிட்டுத் தப்பியோடிய 2 வாலிபர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் (22). கூலித் தொழிலாளியான இவர், நேற்று இரவு வழக்கம் போல் வேலை முடிந்து வந்து தனது நண்பர்களின் வீட்டில் தங்கியுள்ளார். அப்போது நள்ளிரவில் நண்பர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதனால் ஆத்திரமடைந்த 2 நண்பர்கள், கூர்மையான ஆயுதங்களால் அஸ்வினின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்தனர். கொலை செய்ததோடு மட்டுமின்றி, ரத்த வெள்ளத்தில் கிடந்த அஸ்வினின் சடலம் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய கத்தியுடன் கொலையாளிகள் செல்ஃபி புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படங்களை தங்களது சக நண்பர்களின் வாட்ஸ்அப் குழுக்களுக்குப் பகிர்ந்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இந்த புகைப்படத்தை வாட்ஸ் அப் குழுவில் பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிணத்துக்கடவு காவல் நிலையப் காவல்துறையினர், அஸ்வினின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய 2 பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். முதற்கட்டமாக தகராறுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

உடன் தங்கியிருந்த நண்பனையே கொலை செய்துவிட்டு செல்ஃபி எடுத்து அனுப்பிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share