பழனியில் ரூ100 கோடி மதிப்பிலான கோவில் நிலம் முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம், போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடிக்கு தனிநபர்களுக்கு மோசடியாக பத்திரப் பதிவு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையானது.
இது தொடர்பாக கோவில் நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், இந்த மோசடி பத்திரப் பதிவை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் மடத்துகுளம் பகுதியை சேர்ந்த வெள்ளதுரை; விழுப்புரம் சாலாமேடு முருகதாஸ்; அன்வர்தீன் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் பத்திரப் பதிவு செய்த சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், திண்டுக்கல் சார் பதிவாளர் சசிகலா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஜஸ்டின் மணிகண்டன் தமக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், விசாரணைக்கு ஜஸ்டின் மணிகண்டன் ஒத்துழைக்கவில்லை என கூறி அவரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக இன்று ஆகஸ்ட் 6-ந் தேதி கைது செய்துள்ளனர்.
