சென்னையில் “தக்காளி வெற்றி கழகம்” என்ற பெயருடன் அரசு பேருந்து இயக்கப்பட்ட வீடியோ வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
சென்னை மாநகரில் TN-01 AN 5522 என்ற மாநகர் போக்குவரத்து கழக பேருந்தின் பின்புற டிஜிட்டல் பலகையில் பேருந்து நிறுத்தங்களின் பெயர்களுக்கு பதிலாக, “தக்காளி வெற்றி கழகம்” என்ற வாசகம் ஓடியது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம், “குறிப்பிட்ட பேருந்தின் வழித்தட விவர (Route Board) பலகை சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் மாற்றப்பட்டிருந்தது; இது குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட பணிமனை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, வழித்தட விவர பலகை சரி செய்யப்பட்டது. மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து ஊழியர்களிடம் நாம் விசாரித்த போது, “பணிமனையில் பேருந்து நிறுத்தப்பட்டிருக்கும் போது விஷமிகள் இப்படியான செயலை செய்திருக்க வாய்ப்பிருக்கிறது.. போதுமான கண்காணிப்பு இல்லாததும் பாதுகாப்பு இல்லாததும்தான் இத்தகைய விஷமங்களுக்கு காரணம்” என்கின்றனர்.
