பயிர் காப்பீடு, ட்ரோன் பயிற்சி, மண் நல அட்டை : வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!

Published On:

| By Kavi

தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண்துறை அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

அப்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய அவர், 

ADVERTISEMENT

”கடந்த ஜூம் 12ஆம் தேதி அன்று மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில், வானம் பொய்தாலும் விவசாயிகள் நலனில் அக்கறை கொண்ட அரசு பொய்க்காது என்பதை மெய்ப்பிக்கும் வகையில், டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு 134 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பிலான குறுவை தொகுப்பு திட்டம் வழங்கப்பட்டது. 

வேளாண்மை நடைபெறும் நிலம் 100% பயிர் காப்பீட்டில் கொண்டு வரப்படும். 2026 – 27ஆம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தை 37 மாவட்டங்களை உள்ளடக்கிய 14 தொகுப்புகளில் குறுவை, சம்பா மற்றும் குளிர்கால பருவங்களில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களில் செயல்படுத்த 648 கோடியே 55 லட்சம் ரூபாய் மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 36 லட்சம் ஏக்கர் சாகுபடி பரப்பு காப்பீடு செய்யப்படும். 

ADVERTISEMENT

மக்களுக்கான உணவு பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் 2026 – 27 ஆம் ஆண்டிற்கு 125 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு மண்வள பாதுகாப்பு இயக்கம் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐந்தாண்டு திட்டமாக இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும்.

ADVERTISEMENT

தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம் 2026-27 ஆம் ஆண்டில் 122 கோடியே 51 லட்சம் ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.

“நெல் விதை விநியோக மானியம் வழங்குவதற்கு 2026-2027ஆம் ஆண்டில், 34 கோடியே 72 இலட்சம் ரூபாய் மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.

“உழவர் செயற்கை நுண்ணறிவுத் திட்டம்” செயல்படுத்திட மாநில நிதியிலிருந்து 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

மண்வளத்தை அறிந்து அதற்கேற்ப சமச்சீர் உரப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக ஒரு இலட்சம் விவசாயிகளுக்கு 4 கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில் மண் நல அட்டைகள் வழங்கப்படும்.

கூடுதலாக, உழவர் அடையாள எண் பெற்ற சுமார் 3 இலட்சம் விவசாயிகளுக்கு “மண் நல அட்டைகள்” ஒன்றிய, மாநில அரசுத் திட்டத்தின் கீழ் 6 கோடியே 16 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்படும்.

மண் வளத்தை மீட்டெடுக்கும் வகையில் ஒரு இலட்சம் ஏக்கர் பரப்பிற்குத் தேவையான தக்கைப்பூண்டு, சணப்பு, கொளிஞ்சி போன்ற பசுந்தாள் உர விதைகள், 22 ஆயிரம் ஏக்கருக்குத் தேவையான பல்வகைத் தானிய விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகிக்கப்படுவதுடன், வளர்ந்த பசுந்தழைகளை நிலத்திலேயே மடக்கி உழுது மட்கச் செய்திட ஏக்கருக்கு 3,000 ரூபாய் உழவு மானியமும் வழங்கப்படும். இதற்கென 63 கோடியே 50 இலட்சம் ரூபாய் மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.

மாநிலம் முழுவதும் உயிர்ம வேளாண்மையினைப் பரவலாக்கம் செய்யும் நோக்கில், 2026-27 ஆம் ஆண்டில், மாநில அரசின் சிறப்புத் திட்டமாக, 20,000 ஏக்கரில் உயிர்ம வேளாண் முறைகளைப் பின்பற்றும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 4 ஆயிரம் ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இது தவிர, பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில், வேளாண்மையில் ஒருங்கிணைத்து, ஈடுபடும் உயிர்ம உழவர்களை 7,500 ஏக்கரை உள்ளடக்கிய உயிர்ம வேளாண்மைத் தொகுப்புகள் உருவாக்கவும், இயற்கை வேளாண்மை வாயிலாக மண் வளத்தை மேம்படுத்தி, நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்திட, இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தில் (National Mission on Natural Farming) 3,125 இயற்கை வேளாண்மைத் தொகுப்புகள் உருவாக்கவும் 7,500 ஏக்கரில் இயற்கை வேளாண்மை மேற்கொண்டுவரும் விவசாயிகள் இரண்டாம் ஆண்டு செயல்பாடுகளைத் தொடரவும் 2026-27 ஆம் ஆண்டில் 9 கோடியே 12 இலட்சம் ரூபாய் ஒன்றிய மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பயறுவகைகளில் 65 கோடியே 28 இலட்சம் ரூபாயிலும், உணவு எண்ணெய் வித்துகளில் 138 கோடியே 36 இலட்சம் ரூபாயிலும், ஆக மொத்தம் 203 கோடியே 64 இலட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில நிதி ஒதுக்கீட்டில் “பயறுவகைகள் மற்றும் உணவு எண்ணெய் வித்துகளில் தன்னிறைவுக்கான இயக்கம்” செயல்படுத்தப்படும்.

தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் 63 கோடியே 81 இலட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில அரசின் நிதி
ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

2026-27 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் “தமிழ்நாடு குறுதானிய இயக்கம்” செயல்படுத்த 7 கோடியே 61 இலட்சம் ரூபாய் மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.

 “பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்” 2026-27 ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டுத் திட்டமாக செயல்படுத்தப்படும். நடப்பாண்டில், 73 ஆயிரத்து 360 ஏக்கர் பரப்பளவில் 27 கோடியே 21 இலட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில், 40 ஆயிரம் பருத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

மக்காச்சோளம்  உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம்  36 கோடி ரூபாய் ஒன்றிய, மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாட்டின் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத்திடவும், விவசாய நிலங்களில் நிரந்தர பசுமைச் சூழ்நிலையினை உருவாக்கிடவும் வேளாண் காடுகள் திட்டத்தைச் செயல்படுத்திட, 2026 – 27 ஆம் ஆண்டில், 17 கோடியே 70 இலட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் நாற்றங்கால்கள் அமைத்து, தரமான மரக்கன்றுகள் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.

அண்மைக் காலங்களில் தமிழ்நாட்டில் காட்டுப்பன்றிகளால் பயிர்கள் தொடர்ந்து சேதமடைந்து, விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகின்றனர். காட்டுப்பன்றியால் ஏற்படும் பயிர் இழப்புகளைத் தடுக்கும் நோக்கில் பெரும்பான்மையான விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க, இதற்கான சிறப்புத் திட்டம் 2026-27 ஆம் ஆண்டில் 7 கோடியே 35 இலட்சம் ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.

அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டத்துக்கு 56 கோடியே 72 இலட்சம் ரூபாய் மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.

நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், பருத்தி உள்ளிட்ட ஒன்பது பயிர்களில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டு, அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு, மாவட்ட அளவில் “வெற்றி விவசாயி விருது” வழங்கப்படும். முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாய் என 90 பரிசுகள், 67 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்படும்.

நம்மாழ்வார் விருதுக்கு 11 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு.

3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேளாண் கண்காட்சி நடத்தப்படும்.

தமிழ்நாட்டில் வேளாண்மைத் துறையின் 22 திரவ உயிர் உர உற்பத்தி மையங்களின் கட்டமைப்பை வலுப்படுத்திட புதிய நொதிகலன், இன்குபேட்டர், நீராவி ஜெனரேட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் நிறுவ 3 கோடியே 56 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

விதை சுத்திகரிப்புத் திறனை அதிகரிக்கும் நோக்கில், சேலம் மாவட்டம் கெங்கவல்லி, தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம், விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு ஆகிய மூன்று இடங்களில் தலா 250 மெட்ரிக் டன் விதை சேமிப்புக் கிடங்குகளுடன் கூடிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள். 7 கோடியே 10 இலட்சம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும்.

கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டம் 9 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்.

கள்ளக்குறிச்சி-1 கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எத்தனால் உற்பத்தி குறித்த சாத்தியக் கூறு ஆய்வு செய்ய 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

அரசின் தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2026-27 ஆம் ஆண்டில், 2 இலட்சத்து 22 ஆயிரத்து 794 ஏக்கரில், 95 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், நீர் மேலாண்மைக்கான துளித் துளித் தண்ணீர் திட்டம் 785 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

பனை பாதுகாப்பு இயக்கம் 2.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்படுத்தப்படும்.

நகர்ப்புறங்களில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் கிராமப்புறங்களில், வீட்டைச் சுற்றியுள்ள நிலப் பகுதிகளிலும் செடி வளர்ப்புப் பைகளுடன் கூடிய தொகுப்புகள், செங்குத்துத் தோட்டம் மற்றும் நீரியல் தோட்டம் ஆகிய அமைப்புகளில் காய்கறிகள், பழங்கள், மூலிகைச் செடிகள் போன்றவற்றை வளர்த்து மனமலர்ச்சியையும், நலமான சூழலையும் ஏற்படுத்த “வெற்றி இல்லத்தரசி வீட்டுத்தோட்டம் திட்டம்” நடப்பாண்டில் 10 கோடி ரூபாய் மாநில நிதியில் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாடு தளிர்க்கீரைகள் திட்டத்துக்கு 2026-27ஆம் ஆண்டில், 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

15 கோடியே 55 இலட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில நிதியில், 3 இலட்சம் சதுர மீட்டர் பரப்பில் பசுமைக்குடில் மற்றும் நிழல்வலைக் குடில்கள் அமைக்கப்படும்.

வாழைக்கு முட்டுக்கொடுக்க நிதி உதவி வேண்டி விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், 2026-27 ஆம் ஆண்டில், 6 கோடியே 25 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 6,175 ஏக்கரில் வாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம் செயல்படுத்தப்படும்.

தென்னைக்கான சிறப்பு திட்டம் 16 கோடி ரூபாய் மாநில நிதியில் செயல்படுத்தப்படும்.

தென்னை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையினை செயல்படுத்தும் விதமாகவும் “தமிழ்நாடு தென்னைப் பதப்படுத்தும் கழகம்” வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையால் 22 கோடியே 30 இலட்சம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில் புதிதாக அமைக்கப்படும்.

மானாவாரி நிலங்களில் புளி சாகுபடி ஊக்குவிப்பு திட்டம், நடப்பாண்டில், 20 இலட்சம் ரூபாய் மாநில நிதியில் 250 ஏக்கரில் செயல்படுத்தப்படும்.

50 சிறிய அளவிலான காளான் உற்பத்திக் கூடங்கள் 50 இலட்சம் ரூபாய் நிதியில் அமைக்கப்படும்.

கிழங்குவகை சுவைதாளிதப் பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் 2026-27 ஆம் ஆண்டில், 2,500 ஏக்கரில் 4 கோடி ரூபாய் நிதியில் இவற்றின் பரப்பு விரிவாக்கம் மேற்கொள்ளப்படும்.

2026-27 ஆம் ஆண்டில், 57,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட வெங்காய சேமிப்புக் கிடங்குகள் 22 கோடியே 80 இலட்சம் ரூபாய் நிதியில் அமைக்கப்படும்.

கிராம அளவில் வேளாண் இயந்திரமயமாக்கலைப் பரவலாக்கும் நோக்கில், வேளாண் இயந்திரங்கள், கருவிகள், மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள், சூரியக் கூடார உலர்த்திகள் முதலியன மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. 2026-27 ஆம் ஆண்டில், 227 கோடியே 20 இலட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில நிதி ஒதுக்கீட்டில் 24,000 விவசாயிகள் பயன்பெறும் வகையில் சுமார் 8,870 பவர் டில்லர்கள், 5,090 விசைக்களையெடுப்பான்கள், 1,400 சுழற்கலைப்பைகள், 855 டிராக்டர்கள் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த ஆண்டு முதல், சூரியக் கூடார உலர்த்தி அமைக்க அதிகபட்ச மானியமாக இருந்த 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயினை உயர்த்தி 4 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும். பெண் விவசாயிகளிடையே வேளாண் இயந்திரமயமாக்கலை ஊக்குவிப்பதற்காக, இத்திட்டத்தில் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஐக்கிய நாடுகள் சபை 2026-ஆம் ஆண்டினை “சர்வதேச பெண் விவசாயிகள் ஆண்டாக” அறிவித்துள்ள நிலையில், பெண்களை ட்ரோன் இயக்குபவர்களாக மாற்றுவதன் வாயிலாக வேளாண்மையில் உரம், பூச்சிக்கொல்லி தெளித்தல், பயிர்க் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகள் எளிதாக்கப்படுவதுடன், வேளாண் பணிகளில் ஆள்பற்றாக்குறையை எதிர்கொள்ள வாய்ப்பாகவும் அமையும். இதற்காக, தகுதியுள்ள 100 மகளிர் உள்ளிட்ட 500 நபர்களுக்கு மாநில அரசு செலவில் ட்ரோன் இயக்குபவர் பயிற்சி மற்றும் இயக்குபவர் உரிமம் (Drone Pilot License) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலை விமானப் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும். பயிற்சி பெற்ற 50 மகளிருக்கு ட்ரோன்கள் 50 சதவீத மானியத்தில், 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் மாநில நிதியிலிருந்து வழங்கப்படும்.

சூரிய சக்தி பம்புசெட்டுகள் அமைக்கும் திட்டத்துக்கு, 2026-27 ஆம் ஆண்டில், 23 கோடியே 6 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

“தமிழ்நாடு விவசாயிகளின் வருமான மேம்பாட்டு ஆணையம்”, 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு அமைக்கப்படும். இப்பணிகளை மேற்கொள்ள இவ்வாண்டு 5 கோடியே 20 இலட்சம் ரூபாய் மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்” என்று அறிவித்தார்.

 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share