“சக ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் புகழ்பெற்ற இந்திய புலனாய்வு பத்திரிகையாளர் தருண் தேஜ்பால் குற்றவாளி” என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தெகல்கா இதழின் நிறுவனரும் முன்னாள் ஆசிரியருமான தருண் தேஜ்பால், கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கு கடலோர மாநிலமான கோவாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார்..
அங்கு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருந்தபோது லிப்டில் வைத்து சக பெண் பத்திரிகையாளரை பாலியல் வன்கொடுமை செய்ததாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் கோவா போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த கோவா அபுசா அமர்வு நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் தருண் தேஜ்பாலை விடுவித்தது.
இதற்கிடையே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தருண் தேஜ்பால் உச்ச நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவால் 7 மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.
இந்த சூழலில் பாதிக்கப்பட்ட பெண் கோவா அபுசா அமர்வு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
இந்த வழக்கில் இன்று (ஆகஸ்ட் 6), தருண் தேஜ்பால் குற்றவாளி என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவா நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்த நீதிபதிகள் நீலா கோகலே, அமித் ஜம்சண்டேகர் அமர்வு, ‘இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 376 (2)(d), 376(2)(k) மற்றும் 354 A, 354B ஆகியவற்றின் கீழ் தருண் தேஜ்பால் குற்றவாளி என்று அறிவித்தனர்.
தொடர்ந்து தண்டனை விவரங்களை வெளியிடுவதற்கு முன்னதாக தருண் தேஜ்பால், தனக்கு 62 வயதாகி விட்டதால் கருணை காட்ட வேண்டும். தண்டனையை குறைத்து வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
சிறை துறை அதிகாரிகள் முன் ஆஜராவதற்கு இரண்டு வாரங்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு டிசம்பரில் டெல்லி பேருந்து ஒன்றில் 23 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பாலியல் வன்கொடுமை வழக்குகள் கையாளப்படும் விதம் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்த காலகட்டத்தில் இந்த வழக்கும் வெளிச்சத்துக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
