தமிழ்நாட்டின் 4 புதிய ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசுதான் உதவ வேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.


மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
தமிழ்நாட்டிற்கு 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை ரூ.879 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் 2026-27-ம் ஆண்டில் ரூ.7,611 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரையிலான நிதியாண்டு காலகட்டத்தில் 1,356 கிலோமீட்டர் தொலைவிற்கு புதிய வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 3 நிதியாண்டுகள் மற்றும் நடப்பு நிதியாண்டில் மொத்தம் 3,511 கிலோமீட்டர் தொலைவை உள்ளடக்கிய 29 ஆய்வுகளுக்கு (4 புதிய வழித்தடம், 25 இரட்டை வழித்தடம்) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்துதலில் உள்ள தாமதம் காரணமாக முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்கள் தடைப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காகத் தேவைப்படும் 4,612 ஹெக்டேர் நிலங்களில் 1,178 ஹெக்டேர் (26%) நிலங்கள் மட்டும் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
நிலம் கையகப்படுத்துதலை விரைவுபடுத்த தமிழக அரசின் ஆதரவு தேவை.
நிலம் கையகப்படுத்துதலில் ஏற்படும் தாமதம் காரணமாக
- திண்டிவனம் – திருவண்ணாமலை புதிய வழித்தடம்
- அத்திப்பட்டு-புத்தூர் புதிய வழித்தடம்
- மொரப்பூர்-தர்மபுரி புதிய வழித்தடம்
- மன்னார்குடி-பட்டுக்கோட்டை புதிய வழித்தடம்
- தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை புதிய வழித்தடம்
ஆகிய திட்டங்களை செயல்படுத்துவது தாமதமாகியுள்ளது.
தமிழநாடு-தெலுங்கானா மாநிலங்களில் பல்வேறு நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக 2025-26, 2026-27-ம் நிதியாண்டில் (30.06.2026 வரை) முறையே 21 இணை ரயில் சேவைகளும் (10 அம்ரித் பாரத் விரைவு ரயில் உட்பட), 23 இணை ரயில் சேவைகளும் (16 அம்ரித் பாரத் விரைவு ரயில் உட்பட) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
