விஜய் அரசில் வீடு தேடி வருகிறதா டாஸ்மாக் ‘மதுபானம்’? ஆன்லைன் ஆர்டர் எதற்கு?

Published On:

| By Mathi

Does TASMAC "Liquor" Come Home in Vijay's Govt.?

டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்வது என்பது வீடு தேடி கொடுப்பதற்காக அல்ல என்று மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து பெறுவதற்கான நடவடிக்கைகளை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கு பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 6) மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வீடு தேடி மதுபானம் விற்பதற்காக ஆன்லைன் முறை கொண்டுவரப்படவில்லை. ஆன்லைனில் ஆர்டர் செய்தாலும் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு போய்தான் வாங்க வேண்டும். இதன் மூலம் மதுபான பாட்டில்களுக்கு ரூ.10 கூடுதல் வாங்குவது பெரிய அளவில் குறையும். மதுபானம் வாங்கும் போது எம்.ஆர்.பி தொகையைக் கொடுத்தால் போதும். இதைத் தவறான முறையில் சித்தரிக்க வேண்டாம். வீடு தேடி மது விற்பனைக்கான நடவடிக்கை இல்லை இது.

டாஸ்மாக் ஆன்லைன் மதுபான விற்பனை வீடியோ என்பது பொதுமக்களுக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது இல்லை; அது டாஸ்மாக் மதுபான விற்பனையாளர்களின் பயிற்சிக்கானது. அதைத்தான் பரப்பி வருகின்றனர்.

ADVERTISEMENT

சில கடைகளில் குறிப்பிட்ட நிறுவனங்களின் மதுபான ரகங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதாகவும், விரும்பிய ரகங்கள் கிடைப்பதில்லை என்ற குறைக்கு ஆன்லைன் மூலம் தீர்வு கிடைக்கும். எந்தக் கடையில் எந்த மதுபானம் இருக்கிறது என்பதை இதன் மூலம் வெளிப்படையாகத் தெரிந்து கொள்ளலாம். பெங்களூரைப் போன்ற பல வெரைட்டி ரக மதுபானங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் இது இருக்கும்.

மதுபான விலைகளை உயர்த்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை. மதுபானத்தை விற்பனை செய்துதான் அரசு வருவாயைப் பெருக்க வேண்டும் என்பது நோக்கம் அல்ல, கடந்த கால ஊழல்களைக் கண்டுபிடித்துக் குறைத்தாலே அரசு வருவாய் தானாக அதிகமாகும்.

ADVERTISEMENT

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதைத் தடுக்க எந்த ஆட்சியும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இருந்தே நடைமுறையில் இருக்கிறது. ஆனால் தற்போது தவெக ஆட்சிதான் முதல் முறையாக இந்த ஊழல்களைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கிறது. இவ்வாறு அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share