திமுக முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கீதா ஜீவன் மற்றும் சேகர் பாபு ஆகியோர் தொடர்பான வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று அடுத்தடுத்து அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்தது.

துரைமுருகன் மனு டிஸ்மிஸ்
முன்னாள் அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்ற கோரி துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோர் தாக்கல் செய்த தாக்கல் செய்த மனுவை டிஸ்மிஸ் செய்தார் நீதிபதி இளந்திரையன்.

பொன்முடி வழக்கில் ஒத்திவைப்பு
திமுக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி, சைவம்- வைணவம் மற்றும் பெண்கள் குறித்து பேசியதற்காக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் கொடுத்த புகாரில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக பொன்முடி கூறியிருந்தார். பொன்முடியின் மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன் மனு மீதான உத்தரவை ஒத்தி வைத்தார்.

கீதா ஜீவன் வழக்கு
திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் அவரது குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். கீதா ஜீவன் உள்ளிட்டோர் விடுதலையை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பதிலாக 3-ம் நபர் ஒருவர் 839 நாட்கள் தாமதமாக மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது நீதிபதி இளந்திரையன், “839 நாட்கள் காலதாமதத்தை ஏற்பதா வேண்டாமா” என்பது குறித்த உத்தரவு இன்று ஜூன் 25-ந் தேதி பிறப்பிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இன்றைய விசாரணையின் போது, 3-ம் தரப்பு நபரின் 839 நாட்கள் தாமதத்தை மன்னிக்க முடியாது என்றார்.

சேகர்பாபு தேர்தல் வழக்கு
சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்கும் தவெக வேட்பாளர் சினோரா அசோக்குக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை ரத்து செய்யக் கோரி சேகர் பாபுவின் மனுவை நீதிபதி இளந்திரையன் இன்று டிஸ்மிஸ் செய்தார்.
