சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து துரைமுருகனுக்கு விலக்களித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006 – 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்தார் தற்போதைய நீர்வள மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன்.
அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.40 கோடி சொத்து சேர்த்ததாக துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் இருந்து வேலூர் நீதிமன்றம் இருவரையும் விடுவித்தது. இதை எதிர்த்து 2017ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.
இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இருவரையும் விடுவித்த வேலூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது.
இந்த வழக்கு தற்போது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் விசாரணை நீதிமன்றத்தில் துரைமுருகன் சார்பில், வழக்கை வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது துரைமுருகனின் மனைவி நேரில் ஆஜராகி பிடிவாரண்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோரினார். இதனால் துரைமுருகன் மனைவிக்கு விதிக்கப்பட்ட பிடிவாரண்ட் மட்டும் ரத்து செய்யப்பட்டது.
துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரண்ட்டை வருகிற 15ஆம் தேதி அமல்படுத்த காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே வழக்கை வேலூருக்கு மாற்ற மறுத்ததை எதிர்த்து, துரைமுருகன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதி சதீஷ்குமார் முன் இன்று (செப்டம்பர் 10) விசாரணைக்கு வந்த போது, துரைமுருகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், “2017 ஆம் ஆண்டு வழக்கிலிருந்து துரைமுருகன் விடுவிக்கப்பட்ட நிலையில், 2019 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, வழக்கு சென்னைக்கு மாற்றப்பட்டிருக்கிறது என்றும் துரைமுருகனுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது” என்றும் சுட்டிக்காட்டினார்.
இதைத்தொடர்ந்து, வழக்கு விசாரணையில் இருந்து நேரில் ஆஜராவதற்கு துரைமுருகனுக்கும், அவரது மனைவிக்கும் விலக்கு அளித்த நீதிபதி, இந்த மனுவுக்கு செப்டம்பர் 22ஆம் தேதிக்குள் பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டார்.
