மத்திய அரசின் உளவுத் துறையின் (Intelligence Bureau – IB) புதிய இயக்குநராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி டாக்டர் மகேஷ் தீட்சித் (Mahesh Dixit) நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய உளவுத்துறை இயக்குநர் தபன் குமார் தேகாவின் பதவிக்காலம் ஜூன் 30-ந் தேதி முடிவடையும் நிலையில் மகேஷ் தீட்சித் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தற்போதைய உளவுத்துறை இயக்குநர் தபன் குமார் தேகாவின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அடுத்த இயக்குநர் யார்? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 2022-ம் ஆண்டு ஐபி இயக்குநராக தபன் குமார் நியமிக்கப்பட்டார்; அவருக்கு 2024, 2025-ம் ஆண்டுகளில் 2 முறை பதவி நீட்டிப்பும் வழங்கப்பட்டது. ஆனால் 3-வது முறையாக அவருக்கு பதவி நீட்டிப்பு தரப்படவில்லை.
மேலும் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளான சுனில் ஆச்சார்யா மற்றும் ரித்விக் ருத்ரா பெயர்களும் புதிய ஐபி இயக்குநர் பதவிக்கு அடிபட்டன. ஆனால் மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு (ACC), டாக்டர் மகேஷ் தீட்சித்தை புதிய இயக்குநராக தேர்வு செய்தது.

யார் மகேஷ் தீட்சித்? (Mahesh Dixit)
1967-ல் பிறந்தவர் மகேஷ் தீட்சித். முந்தைய ஆந்திரா- இன்றைய தெலுங்கானா கேடரைச் சேர்ந்த 1993-ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான டாக்டர் மகேஷ் தீட்சித், 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் காவல் மற்றும் உளவுத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள உளவுத்துறையின் துணை உளவுப் பணியகத்தின் (SIB) தலைவராக, ஜம்மு, காஷ்மீர் மற்றும் லே ஆகிய பகுதிகளில் உளவுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஒருங்கிணைப்பைக் கையாண்ட அனுபவம் பெற்றவர்.
2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஜம்மு காஷ்மீரில் எந்தவித குழப்பங்களும் ஏற்படாத வகையில் வியூகம் வகுத்து செயல்பட்டவர் டாக்டர் மகேஷ் தீட்சித்.
கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பரில் உளவுத் துறையின் சிறப்பு இயக்குநராக (Special Director) பதவி உயர்வு பெற்றார். தற்போது உளவுத்துறையின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மகேஷ் தீட்சித் 2 ஆண்டுகள் இப்பதவியை வகிப்பார்.
