கொரோனாவால் இரண்டு பேர் உயிரிழப்பு : கண்காணிப்பு தீவிரம்!

Published On:

| By Kavi

one killed by corona virus in chennai

கொரோனா வைரசால் ஆந்திராவில் இரண்டு பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் மாநிலம் முழுவதும் சுகாதாரத் துறை அதிகாரிகள் அலர்ட் செய்துள்ளனர். 

2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். 

ADVERTISEMENT

2021 ஆம் ஆண்டுக்கு பிறகு படிப்படியாக வைரஸ் பரவல் குறைய தொடங்கி மீண்டும் இயல்பு நிலை திரும்பியது. 

இந்த சூழலில் இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

ஆந்திராவில் கடப்பா மற்றும் அன்னமய்யா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சூழலில் ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் வேலூர் சிஎம்சியில் அனுமதிக்கப்பட்டு கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார் என்று தகவல் பரவியது. 

ADVERTISEMENT

இது தொடர்பாக வேலூர் மாவட்ட சுகாதார அதிகாரி விஜய சந்திரன் தி இந்து ஊடகத்திடம் கூறுகையில், “என். சுப்புராயடு என்பவர் ‘செப்டிசீமியா’ பாதிப்புக்காக ஜூன் 28 அன்று சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு உடல்நலச் சிக்கல்கள் இருந்தன. அனுமதிக்கப்பட்ட அன்றே அவர் உயிரிழந்து விட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்படவில்லை. அது தவறான தகவல். பொதுமக்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார். 

அதுபோன்று கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த, 68 வயதான கிளாரி மனோகரன் பெஞ்சமின், கடந்த பிப்ரவரி மாதம் முதல் பெருங்குடல் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ஜூன் 20ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியானது.

ஆனால், பெருங்குடல் புற்றுநோய் நுரையீரலுக்குப் பரவியதன் விளைவாக ஏற்பட்ட தற்செயலான தொற்றால் உயிரிழந்தார். இந்தத் தொற்று மற்ற நோயாளிகளுக்குப் பரவாது. சுவாச பிரச்சனையால் (type 1) உயிரிழந்தார்” என்றும் தெரிவித்துள்ளார். 

ஆந்திராவில்  கண்காணிப்பு…

ஆந்திராவின் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின் கீழ் உள்ள மாநில கண்காணிப்புப் பிரிவு, அனைத்து மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அலுவலர்கள், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளை எச்சரிக்கையுடன் இருக்குமாறும், நோய்த்தொற்றுகள் அதிகரித்தால் உடனடியாகத் தயார்நிலையை அதிகரிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

அனைத்து அரசு பொது மருத்துவமனைகளிலும் 10  படுக்கைகளுடன் தனியாக ஒரு வார்டு உருவாக்கப்பட வேண்டும். 

RT-PCR பரிசோதனைக் கருவிகள், ரெம்டெசிவிர் , தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், N95 முகக்கவசங்கள் மற்றும் பிற அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை இருப்பு வைக்குமாறும் மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொற்று பரவும் அபாயத்தைக் குறைக்க, “கைகளைச் சுத்தமாக வைத்திருத்தல், சுவாச சுகாதாரம் மற்றும்  சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்தல் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களைச் சரியாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட தொற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு  நடைமுறைகளை வலுப்படுத்துமாறு” மருத்துவமனைகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து எடுக்கப்படும் மாதிரிகளை உடனடியாக ஆய்வகங்களுக்கு அனுப்பி பரிசோதனை செய்து  உரிய சிகிச்சை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share