COVID 19: ‘கொரோனா’ பாதிப்பு குறைவு- அதிக வீரிய வைரஸ் இல்லை- வதந்திகளை நம்பாதீர்.. தமிழக அரசு

Published On:

| By Mathi

COVID-19: Cases Low, No Dangerous Variant Spread; Ignore Rumors: TN Govt

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டுகளை விட ‘கொரோனா’ வைரஸ் தொற்று பாதிப்பு (COVID-19) குறைவாகவே உள்ளது; தமிழகத்தில் அதிக வீரிய கொரோனா வைரஸ் பரவல் இல்லை; ஆகையால் பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட அறிக்கை: சமீபத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக ஆந்திர மாநிலத்தில் இரு நபர்கள் உயிரிழந்ததாக, பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது.

ADVERTISEMENT

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபர், திருப்பதி தனியார் மருத்துவமனையில் இருந்து 26.06.2026 அன்று மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு COVID-19 மற்றும் Klebsiella pneumoniae பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருந்தது. மேலும், நீரிழிவு மற்றும் நீண்டகால சிறுநீரக நோய் போன்ற இணைநோய்களும் இருந்தன. கடுமையான Klebsiella pneumoniae தொற்று ஏற்பட்டு தீவிர சுவாசக் கோளாறு (ARDS) ஆகிய சிக்கல்களால் 28.06.2026 அன்று அவர் உயிரிழந்தார்.

வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 68 வயதுடைய நபர் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பெருங்குடல் புற்றுநோயைத் தொடர்ந்து ஏற்பட்ட சுவாச செயலிழப்பு காரணமாக இறப்பு நேரிட்டது. இந்த நிகழ்வில் COVID-19 ஒரு தற்செயலான (Incidental finding) கண்டறிதலாக இருந்தது.

ADVERTISEMENT

ஆந்திரப் பிரதேசம், கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் கடப்பா மருத்துவமனையில் COVID-19 பாதிப்பினால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த மருத்துவ விவரங்கள் ஆந்திரப் பிரதேச சுகாதாரத் துறையால் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின் (Integrated Disease Surveillance Programme – IDSP) கீழ், COVID-19 நோய்க்கான கண்காணிப்பு வழக்கமான (Routine Surveillance) முறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், வழக்கமாக அறுவை சிகிச்சைகளுக்கு முன்னதாகவும் (Pre operative Test) மற்றும் தீவிர சுவாச நோய்கள் சிகிச்சைக்கு பலனளிக்காத நோயாளிகளுக்கும், ஏனைய நோயாளிகளுக்கு வழக்கமாக கோவிட் தொற்று பரிசோதனை செய்வது நடைமுறையில் உள்ளது.

அதன் அடிப்படையில், 2024 ஆம் ஆண்டில் 990 பேருக்கும், 2025ஆம் ஆண்டில் 1,250 பேருக்கும், 2026ஆம் ஆண்டில் 335 பேருக்கும் COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டு, மொத்தம் 2,575 கோவிட் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இவை அனைத்தும் வழக்கமான நோய் கண்காணிப்பின் போது கண்டறியப்பட்டவை மட்டுமே; நோய்த் தொற்று பரவல் (Outbreak) காரணமாக ஏற்பட்டவை அல்ல. பதிவான பெரும்பாலான நோயாளிகளுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்பட்டுள்ளன; நோயின் தீவிரம் அதிகரித்ததற்கான அல்லது வழக்கத்திற்கு மாறான மருத்துவ வெளிப்பாடுகளுக்கான எந்த ஆதாரமும் இல்லை.

இந்நிலையில் தேசிய வைராலஜி நிறுவனம் (NIV), புனே-யில் மேற்கொள்ளப்பட்ட Whole Genome Sequencing (WGS) பரிசோதனைகளின் முடிவுகளின்படி, தற்போது பரவி வரும் வைரஸ் வகை லேசான நோய் வெளிப்பாட்டைக் கொண்டதாகவும், சமூகத்தில் குறைந்த அளவிலான (Low Community Transmission) பரவல் மட்டுமே இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் தேவையற்ற அச்சமோ, பதற்றமோ அடைய வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், முதியவர்கள், கர்ப்பிணிகள், நீண்டகால உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காய்ச்சல், இருமல், தொண்டை வலி அல்லது சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் இருப்பின் அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

கைசுகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் மற்றும் இருமல்/தும்மல் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுதல் போன்ற பொது சுகாதார வழிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தற்போது தமிழ்நாட்டில் அதிக வீரியம் கொண்ட COVID-19 வைரஸ் வகை பரவி வருவதாக எந்த ஆதாரமும் இல்லை. கடந்த ஆண்டுகளை விட தற்போது கோவிட் தொற்று குறைவாகவே உள்ளது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான அனைத்து தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share