நாகர்கோயில் காசிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மூன்று மொழிகளில் தீர்ப்பை வெளியிட்டுள்ளது.
பெண் மருத்துவர் உள்ளிட்ட 120-க்கும் அதிகமான பெண்களிடம் பழகி, அவர்களின் ஆபாச புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வேன் எனக் கூறி மிரட்டி பணம் பறித்த வழக்கில் நாகர்கோவில் காசி கடந்த 2020ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
சிபிசிஐடி விசாரணையில் காசியிடம் பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப்பில் இருந்து 400 ஆபாச வீடியோக்கள், 1900 புகைப்படங்கள் இருப்பது தெரியவந்தது. பின்னர் காசி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில் நாகர்கோவில் விரைவு நீதிமன்றம் காசிக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து காசி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை இன்று (ஜூலை 14) விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், ராமகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினர்.
கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது என்று கூறி காசிக்கு வாழ்நாள் சிறை தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்பை மூன்று மொழிகளில் வெளியிடவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
அந்த உத்தரவில், ”மனித நாகரிகம் தோன்றிய காலம் முதலே, அந்தரங்கத்தைப் பேணுவதும் கண்ணியமான நடத்தையைப் பின்பற்றுவதும் மனித கண்ணியத்தின் பிரிக்க முடியதாத கூறுகளாகக் கருதப்பட்டு வருகின்றன. இதனை, பைபிளில் இடம்பெறும் ஆதாம் மற்றும் ஏவாள் பற்றிய கதை குறியீட்டு வடிவில் வெளிப்படுத்துகிறது. தங்களின் நிர்வாண நிலையை உணர்ந்த பின்னர் அவர்கள் இலைகளால் தங்களை மூடிக் கொண்டனர். இது அந்தரங்கத்தையும், கண்ணியத்தையும் பாதுகாக்கும் மனிதனின் இயல்பான உள்ளுணர்வைக் காட்டுகிறது.
நாகரிகம் வளர்ச்சியடைந்தபோது உடை என்பது வெறும் உடல், தேவையாக மட்டுமல்லாமல், மனித கண்ணியத்தையும் சமூக ஒழுங்கையும் பிரதிபலிக்கும் முக்கிய அடையாளமாகவும் மாறியது. வருந்தத்தக்க வகையில், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சில மனச்சாட்சியற்ற நபர்கள், இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளின் நம்பிக்கையையும் உணர்ச்சி ரீதியான பலவீனங்களையும் தங்களது சுயநல நோக்கங்களுக்காக தகாத வழியில் பயன்படுத்துகின்றனர்.
தந்திரமாக ஏமாற்றுதல், பொய்யான வாக்குறுதிகள் அல்லது உணர்ச்சி ரீதியாக சூழ்ச்சிமிக்க வற்புறுத்தல்கள் மூலம், அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை அந்தரங்கமான புகைப்படங்கள் அல்லது காணொளிகளைப் பகிரத் தூண்டுகின்றனர். அவ்வாறு பெற்றுக் கொண்ட பின்னர், நம்பிக்கைத் துரோகம் செய்து, அந்தரங்கப் புகைப்படங்கள் அல்லது காணொளிகளை சமூக வலைத்தளங்கள் மற்றும் பிற இணையத் தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி. பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ந்து சுரண்டலுக்கும் அவமானத்திற்கும், கடுமையான மன உளைச்சலுக்கும் உள்ளாக்குகின்றனர்.
இத்தகைய சூழ்நிலைகளில், அனைத்து சிறுமிகளிடமும் இளம் பெண்களிடமும் இந்த நீதிமன்றம் பணிவுடனும் மனமார்ந்த அக்கறையுடனும் ஒரு வேண்டுகோளை முன்வைப்பது எனக் கருதுகிறது. அன்பு எவ்வளவு இருந்தாலும் நம்பிக்கை எவ்வளவு உறுதியானதாக இருந்தாலும், ரகசியம் காக்கப்படும் என்ற நம்பிக்கையில் மின்னணு வழிகளில் அந்தரங்கமான புகைப்படங்கள் அல்லது காணொளிகளைப் பகிரக் கூடாது.

ஏனெனில் அத்தகைய கோப்புகள் ஒருவரின் முழுமையான கட்டுப்பாட்டை விட்டு வெளியேறியவுடன் அவை எளிதில் தவறாக பயன்படுத்தக் கூடிய அபாயம் உருவாகிறது.
இதன் விளைவாக அந்தரங்கம், கண்ணியம் மற்றும் மன நலத்திற்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகள் ஏற்படக் கூடும். நம்பிக்கை துரோகம் செய்யப்பட்ட பின்னர் சட்ட ரீதியான நிவாரணத்தை நாடும் வேதனையான செயல்முறையை எதிர்கொள்வதை விட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதே எப்போதும் சிறந்ததாகும்.
எனவே, டிஜிட்டல் உலகில் தங்களது அந்தரங்கத்தையும் கண்ணியத்தையும் பாதுகாப்பதில் மிகுந்த விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு ஒவ்வொரு சிறுமியையும் பெண்ணையும் இந்த நீதிமன்றம் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறது. ஒரு கண நேர தவறான நம்பிக்கை, வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் துயரத்திற்கும் வேதனைக்கும் காரணமாக மாறக்கூடும்” என்று அறிவுரை வழங்கினர்.
இந்த தீர்ப்பை இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் வெளியிட்ட நீதிபதிகள், கால அவகாசம் இல்லாத காரணத்தால், நாட்டின் அனைத்து பிராந்திய மொழிகளிலும் இந்த வேண்டுகோளை விடுக்க முடியாமல் போனதற்காக தங்கள் வருத்தத்தையும் தெரிவித்தனர்.
