பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு (Armstrong Murder Case) விவகாரத்தில் தமிழக அரசு திடீரென முக்கிய முடிவு எடுத்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 5-ந் தேதி சென்னையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட நாகேந்திரன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரி ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் இமானுவேல் மற்றும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரி தனித்தனியாக மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
”காவல்துறையின் விசாரணையில் பல குளறுபடிகள் இருப்பதாகவும், கொலையில் உள்ள அரசியல் பின்னணிகள் சரியாக விசாரிக்கப்படவில்லை” என்றும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன், வழக்கின் தன்மையை முன்னிட்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றி கடந்த ஆண்டு செப்டம்பர் 24-ந் தேதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவுக்கு எதிராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணையின் போது , சிபிஐ விசாரணைக்கான சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடைக்காலத் தடை விதித்தது உச்சநீதிமன்றம்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தமது மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற்றுள்ளது. இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்க உள்ளது.
