பழனியில் ரூ.100 கோடி நில மோசடி விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு உடனே மாற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான கோவில் நிலம், வெறும் ரூ. 2 கோடி மதிப்பிற்கு தனியார் பெயருக்கு மாற்றப் பட்டிருப்பது என்பது ஏதோ Clerical Error போல இந்த பொய்க்கால் குதிரை அரசு கடக்க முயல்வது ஏற்புடையதல்ல.
தவறு நடந்திருப்பதை அமைச்சரே ஒப்புக்கொண்டு இருப்பதால், இது மிகப்பெரிய ஊழல்!
இந்த பத்திரப் பதிவு குறித்த விவரங்கள் ஏன் பொதுவெளியில் வரவில்லை? யார் பெயரில் இந்த நிலம் மாற்றப்பட்டது? அந்த நபர் இந்த வழக்கில் குற்றவாளி இல்லையா?
இவ்வளவு பெரிய ஊழல், அதுவும் பழனி முருகப் பெருமானின் சொத்தையே வளைத்து போடும் நோக்கத்தில் நடந்திருக்கிறது. இவ்வளவு பெரிய பத்திரப் பதிவு நடக்கிறது என்றால், அதை ஏதோ ஒரு Powercenter தான் முன்னின்று இதற்கான உத்தரவுகளை கொடுத்திருக்க வேண்டும். தனது ஆட்சியில் தான் மட்டுமே Powercenter என்று சொன்ன முதல்வர் விஜய் அவர்களே! இந்த ஊழலில் பின்னால் யார் அந்த பவர் சென்டர் ?
அதுவும், முதலில் ஒரு சார்பதிவாளர் இதனை பதிவு செய்ய இயலாது என மறுத்த நிலையில், அவர் மாற்றப்பட்டு, வேறு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்ட பிறகு இந்த பத்திரப் பதிவு நடைபெற்றது என்றால், இந்த பத்திரப் பதிவிற்காக தான் புதிய அதிகாரியே வந்தாரா? அந்த அளவிற்கு அதிகாரியையே மாற்றி காரியத்தை முடிக்கும் அளவிற்கு யார் அந்த பவர் சென்டர் ?
இதனை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள CBCID விசாரிப்பது என்பது, இந்த கேள்விகளுக்கு உண்மையான பதிலைத் தராது.
நேர்மையான விசாரணை நடைபெற, பழனி முருகன் கோவில் சொத்து முறைகேடு வழக்கை CBI விசாரிக்க உடனடியாக இந்த அரசு மாற்றிட வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி: உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான, பழனியின் மையப்பகுதியில் கார் நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வந்த ₹100 கோடிக்கும் மேல் மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலத்தை சட்ட விதிமுறைகளுக்கு மாறாக மூன்று தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்தது எப்படி? இரவுகளில் கன்னக்கோல் போடுவதைப் பற்றியும், வீடு புகுந்து திருடுவதைப் பற்றியும், பிக்பாக்கெட் அடிப்பதைப் பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால், பட்டப்பகலில் முருகன் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தையே பத்திரப்பதிவு செய்து கொள்ளையடிப்பது எப்படிச் சாத்தியமாயிற்று? பழனி முருகன் கோவிலுக்கு அருகாமையில், பழனி நகராட்சியின் 3-ஆவது வார்டு, 25-ஆவது பிளாக்கில், சர்வே எண்கள் 998 மற்றும் 999-இல் உள்ள 1.40 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை, கடந்த ஜூலை மாதம் 6-ஆம் தேதி அன்று விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகதாஸ், பழனி அருகே உள்ள பாப்பாங்குளம் சேர்ந்த வெள்ளத்துரை மற்றும் பழனி அருகே உள்ள டி.கே.என் புதூரைச் சேர்ந்த சேதுபதி ஆகிய மூவர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதும்; இதற்கு உடந்தையாகச் சார்பதிவாளர் மணிகண்டன் செயல்பட்டுள்ளார் என்பதும் தெரியவருகிறது.
இந்த நிலம் ஆட்சேபனைக்குரியது என அறநிலையத்துறை ஆணை இருப்பது தெரிந்தும், யாருடைய தூண்டுதலின் பேரில் அல்லது ஆதரவின் பேரில் இந்த நில மோசடி நடந்துள்ளது என்பது தமிழக மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும். இந்த குற்றச்சாட்டு வெளியானவுடன், அடிமட்ட அளவில் சார்பதிவாளர் உள்ளிட்ட ஒருசிலர் பெயரைக் குறிப்பிட்டு வெறுமனே ஒரு முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் உண்மை வெளிவராது.
ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு மாதத்தில், சட்டமன்றத்திற்கு உள்ளும், பொதுவெளியிலும் விஜய் அவர்கள் தூய ஆட்சியைப் பற்றி வலியுறுத்தி வருகிறார். ஆனால், பழனி முருகன் கோவில் சொந்தமான நிலம் சட்டவிரோதமாக சில தனிநபர்களின் பெயரில் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலிடப் புள்ளிகளின் ஆதரவு இல்லாமல் இந்த குற்றம் நடைபெற வாய்ப்பில்லை.
தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் ஆட்சி வந்த பிறகு எழுப்பப்பட்டிருக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டு இதுவாகும். ஒரு அரசை வீழ்த்த 100 குற்றச்சாட்டுகள் தேவையில்லை; வலுவான ஒரு குற்றச்சாட்டே போதுமானது. எனவே, விஜய் அரசு பழனி முருகன் கோவில் மோசடி நிலப்பத்திரபதிவு உண்மைத்தன்மையை நடுநிலையான, நேர்மையான, சுதந்திரமான விசாரணை, குறிப்பாக உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதியின் (Sitting Judge) கீழ் நடத்தப்பட்டு, அந்த மேலிடப்புள்ளி யார் என்பது ஆன்மீகப் பெரியோர்களுக்கும் தமிழக மக்களுக்கும் வெளிப்படுத்தப்பட்டு சமந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன்.
