கோவை மாவட்டம் கணியூரில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமாருக்கு வரவேற்பு அளிப்பதில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் நேற்று இரவு கணியூர் பகுதியில் வாகனத்தில் சென்றபடி தனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த தவெகவினர் எம்.எல்.ஏ-வுக்கு மாலை அணிவித்து வரவேற்கத் திட்டமிட்டனர். அப்போது, தவெக பெண் நிர்வாகியான வசந்தி என்பவர் மாலை அணிவிக்க முயன்றபோது, அதே கட்சியைச் சேர்ந்த மற்றொரு தரப்பு நிர்வாகிகள் அவரைத் தடுத்து நிறுத்த முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதற்கு வசந்தி கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் முன்னிலையிலேயே தவெக இரு தரப்பினரும் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் இந்த வாக்குவாதம் தள்ளுமுள்ளாக மாறியது. சட்டமன்ற உறுப்பினர் பேசிக் கொண்டிருக்கும்போதே தவெகவினர் குறுக்கிட்டு மோதிக்கொண்டதால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்த தள்ளுமுள்ளு சம்பவத்தை தொடர்ந்து, தவெக நிர்வாகிகள் தாக்கியதாகக் கூறி காயமடைந்த வசந்தி, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சூலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய சட்டமன்ற உறுப்பினர் சுகுமார், தமிழக முதலமைச்சரின் பெயரைக் குறிப்பிடும் போது “முதலமைச்சர் ஜோசப் ஸ்டாலின்” என்று கூறினார். பின்னர் உடனடியாகத் தனது தவறை உணர்ந்து, “முதலமைச்சர் ஜோசப் விஜய்” என மாற்றித் தெரிவித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
