திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களது கட்சிகளைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கம் இல்லாமல், பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க தீவிர முயற்சி செய்து வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டி உள்ளார்.
சென்னையில் அமைச்சர் நிர்மல் குமார் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “திமுக, அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய மூன்றும் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருவதாகக் கடந்த இரண்டு மாதங்களாகவே நாங்கள் கூறி வருகிறோம். இன்னும் ஓராண்டுக்கு பிறகு திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தங்களைத் தங்கள் கட்சியை நடத்த முடியாமல், பாஜகவுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
ஸ்டாலின் குடும்பத்திலிருந்து இரண்டு பேருக்கும், எடப்பாடி பழனிசாமி குடும்பத்திலிருந்து இரண்டு பேருக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்தால் வாங்கி விட்டு செல்லும் நிலைக்கு இரண்டு மூன்று ஆண்டுகளில் வந்துவிடுவார்கள். ஏனெனில், இரு தரப்பிற்கும் கட்சியை நடத்தவோ, அதனைக் காப்பாற்றவோ விருப்பமில்லை. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய அதிமுகவை எடப்பாடி பழனிசாமி மொத்தமாக அடமானம் வைத்துவிட்டார். ஒரு லெட்டர் பேடும், கட்சி அலுவலகமும் இருந்தால் போதும், காலத்தைத் தள்ளிவிடலாம் என்ற நிலைக்கு அவர் வந்துவிட்டார்.
மறுபுறம், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினும் இந்தக் கட்சியை எப்படி நடத்த வேண்டும், யாரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குக் காலத்தை ஓட்டுவதற்கு அவர்களுக்கு ஒரு இடம் தேவைப்படுகிறது. அதனால்தான் பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி வைக்க முயற்சிக்கிறார்கள். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான், கடந்த 45 முதல் 50 நாட்களாக எங்களது எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எங்கள் தரப்பு எம்.எல்.ஏ.க்களை முப்பது கோடி, நாற்பது கோடி, ஏன் ஐம்பது கோடி ரூபாய் வரை கொடுத்து விலை பேசும் முயற்சிகள் தினமும் அரங்கேறுகின்றன. இது தொடர்பாகச் சிலர் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.
இந்த விவகாரங்கள் தற்போது அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கும் தெரியவந்துள்ளதால், அவரும் இது குறித்துப் பேசியுள்ளார். இந்த அரசை எப்படியாவது முடக்க வேண்டும், செயலிழக்கச் செய்ய வேண்டும் என்ற குறுக்கு வழியில் ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் ஈடுபட்டுள்ளனர். அதன் இறுதி முயற்சியாகவே பாஜகவுடன் கூட்டணி சேரத் துடிக்கிறார்கள். இதனை நாங்கள் கடந்த 50 நாட்களாகச் சொல்லி வருகிறோம்.
தற்போது திமுகவின் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனே மேடையில் பேசும் அளவிற்கு அவர்களின் ரகசிய முடிவுகள் வெளியே வரத் தொடங்கிவிட்டன. இப்போது இவர்களுக்குள் இருக்கும் போட்டியே, திமுக எம்பிக்களில் யாருக்கு எத்தனை மத்திய அமைச்சர் பதவி வேண்டும், அதிமுகவில் எத்தனை பேருக்கு அமைச்சர் பதவி வேண்டும். எந்த விகிதாசாரத்தில் பாஜகவுடன் கூட்டணி வைப்பது, அல்லது மூன்று கட்சிகளும் ஒன்றிணைவதா, அல்லது கட்சிகளையே மொத்தமாக இணைப்பதா என்ற பேச்சுவார்த்தைதான் சென்று கொண்டிருப்பதாகவே இவர்களின் நடவடிக்கைகள் காட்டுகின்றன.”என்றார்.
