லாக் அப் மரணங்களில் கடும் நடவடிக்கை: அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Minister Nirmal Kumar Press Meet

“காவல் நிலையங்களிலோ அல்லது சிறைகளிலோ மரணங்கள் ஏற்பட்டால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் இந்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்” என்று அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் நிர்மல் குமார் இன்று (ஜூலை 16) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது லாக்அப் மரணங்கள் குறித்து பேசுகையில், “முதலமைச்சரின் தெளிவான உத்தரவின்படி, காவல் நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் எக்காரணம் கொண்டும் அத்துமீறல்களோ, மரணங்களோ நிகழக் கூடாது. ஒருவேளை சிறைத்துறை வார்டன்களோ அல்லது காவல்துறையினரோ தவறு செய்து, அதனால் மரணம் ஏற்பட்டால் இந்த அரசு எவ்வித சமரசமும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ADVERTISEMENT

கடந்த கால ஆட்சிகளில் இதுபோன்ற சம்பவங்கள் வெளியே தெரிந்தால் அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படும் என்று மூடி மறைக்கும் வேலைகளைத்தான் செய்தார்கள். ஆனால், தற்போதைய முதலமைச்சர், தவறு எங்கு நடந்திருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெளிவாக உத்தரவிட்டுள்ளார்.

அதன்படியே, நாகர்கோவில் சிறை மரணச் சம்பவத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பே வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கடந்த காலங்களில் தேங்கிக் கிடந்த இதுபோன்ற வழக்குகள் அனைத்திலும் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதில் யாரையும் காப்பாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை. இதுபோன்ற விவகாரங்களில் இந்த அரசு எப்போதும் பாதிக்கப்பட்டவர்களின் பக்கமே நிற்கும்.

ADVERTISEMENT

புழல் சிறை மரணம் குறித்து விசாரணை:

இதேபோல், புழல் சிறையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த மற்றொரு மரணம் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் அந்த நபருக்கு உடல்நலக் குறைவு இருந்ததாகத் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பான பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு, முழுமையாக விசாரிக்கப்பட்டு அறிக்கை வெளியிடப்படும். ஒருவேளை அதிலும் ஏதேனும் தவறுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டால், கண்டிப்பாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share