”9ஆம் வகுப்பில் 3வது மொழி வேண்டாம்”: நவோதயா பள்ளிகள் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து!

Published On:

| By Kavi

நவோதயா பள்ளி வழக்கு விசாரணையில், 9ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை கொண்டு வந்தால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

குமரி மகா சபா என்ற அமைப்பு நவோதயா பள்ளிகளை அமைக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தது.  இந்த வழக்கில் தமிழக அரசு நவோதயா பள்ளிகள் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து  முந்தைய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 

ADVERTISEMENT

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.  தொடர்ந்து இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தது. 

இதைத்தொடர்ந்து முந்தைய திமுக அரசு தாக்கல் செய்த பிரம்மாண பத்திரத்தில்,  ”நவோதயா பள்ளிகள் மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றுகின்றன. இந்தி திணிப்புக்கு நவோதயா பள்ளிகள் வழிவகுக்கும். இது தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் இரு மொழிக் கொள்கைக்கு எதிரானது.

ADVERTISEMENT

தமிழகத்தில் 38 உறைவிட மாதிரி பள்ளிகள் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த மாதிரி பள்ளிகளில் படித்த 1,340 மாணவர்கள் 2024-2025 கல்வியண்டில் அகில இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். பல மாணவர்கள் ஸ்காலர்ஷிப் பெற்று சர்வதேச கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர். 

கூடுதல் செலவை ஏற்படுத்தும் நவோதயா பள்ளிகளை கொண்டு வர நினைக்கும் மத்திய அரசு, சமகிரக சிக்ஷா திட்டத்தின் கீழ் மாநில அரசுக்கு கல்விக்காக வழங்க வேண்டிய நிதியை விடுவிக்காமல் உள்ளது. 

ADVERTISEMENT

கூடுதலாக நிறுவனங்களை கொண்டு வருவதற்கு பதிலாக மத்திய அரசு ஏற்கனவே ஏற்றுள்ள தனது கடமைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது. 

இந்தசூழலில் நீதிபதிகள் நாகரத்னா, மகாதேவன் அமர்வில் இந்த வழக்கு இன்று (ஜூலை 16) மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிப்பிரியா, ”இந்த வழக்கை 12 வார காலம் ஒத்தி வைக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார். 

இதற்கு மறுப்புத் தெரிவித்த நீதிபதிகள், ”ஏற்கனவே இந்த கடிதத்தை கொடுத்திருக்கிறீர்கள். தற்போது தமிழகத்தில் புதிய அரசு அமைந்திருக்கிறது.  ஏன் நவோதயா பள்ளிகளை எதிர்க்கிறீர்கள்? என்று தெரிவியவில்லை.  இந்த அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறோம்” என்று கூறினர். 

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரியதர்ஷினி, ”தமிழ்நாட்டில் 1500க்கும் அதிகமான சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஆனால் இந்தியை காரணம் காட்டி தமிழக அரசு நவோதயா பள்ளிகளை எதிர்க்கிறது. இதில் உள்நோக்கம் இருக்கிறது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. கல்வியில் சமநிலை இல்லாத சூழல் ஏற்படுகிறது” என்று தெரிவித்தார். 

இதைகேட்ட நீதிபதிகள்,  ”தமிழ்நாட்டில் யாரும் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பைதான் எதிர்க்கின்றனர்.  இதை மனதில் வைத்து வாதங்களை முன் வையுங்கள்” என்று கூறினர்.  

தமிழக அரசு சார்பில், ”நவோதயா பள்ளிகள் விவகாரம் தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவதால் 12 வாரம் கால அவகாசம் வேண்டும்” என்று  கேட்டுக்கொள்ளப்பட்டது. 

இதையடுத்து நீதிபதிகள்,  ”மத்திய அரசு  அனைத்து செலவுகளையும் செய்யும். நீங்கள் நிலத்தை மட்டும் வழங்கினால் போதும். மற்ற எல்லா மாநிலங்களிலும் நவோதயா பள்ளிகள் செயல்படுகின்றன.   தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏன் அதை மறுக்கிறீர்கள்? ‘நவோதயா பள்ளி மத்திய அரசால் நடத்தப்படுகிறது என்பதால், அது எங்களுக்கு எதற்கு என்ற மனப்பான்மையைக் கொண்டிருக்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினர். 

தொடர்ந்து பேசிய நீதிபதிகள்,  ”மூன்றாவது மொழி என்பது  பிரச்சினைக்குரியதாகவே இருக்கிறது.  தயவுசெய்து 9 ஆம் வகுப்பில் ஒரு புதிய மொழியை அறிமுகப்படுத்தாதீர்கள்.

பத்தாம் வகுப்பில் பொதுத் தேர்வுகளுக்காக தயாராகும் மாணவர்களுக்கு அது கூடுதல் சுமையாக இருக்கும்.   5 அல்லது 6 ஆம் வகுப்பில் மூன்றாவது மொழியைத் தொடங்கலாம். 9 ஆம் வகுப்புக்குள் அந்த மூன்றாவது மொழியை நிறுத்திவிட வேண்டும். மாணவர்கள் படும் மன அழுத்தத்தைப் பாருங்கள். அதுபோன்று மூன்றாவது மொழியாக இந்திதான் கற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சமஸ்கிருதம் கூட கற்கலாம்” என்று கூறினர். 

தொடர்ந்து தமிழக அரசு கேட்ட 12 வார கால அவகாசத்துக்கு மறுப்புத் தெரிவித்த நீதிபதிகள்,  வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share