விசாரணைக்கு சென்ற நெறியாளர் விஜயன் கைதா?

Published On:

| By Kavi

புதிய தலைமுறை தொலைக்காட்சி நெறியாளர் விஜயனை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. 

தவெக ஆட்சியை கவிழ்க்க ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி போலீசார் இதுவரை 8 பேரை கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில்  புதியதலைமுறை தொலைக்காட்சியில் நெறியாளராக பணியாற்றி வரும் விஜயன் போலீசார் விசாரணைக்கு சென்ற நிலையில்,  செல்போனை பறிமுதல் செய்துகொண்டு, இதுவரை போலீசார் அவரை வீட்டுக்கு அனுப்பாமல் உள்ளனர்.

ADVERTISEMENT

போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு  சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட எக்ஸ் பதிவில்,  ”காவல்துறையின் கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறை நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.

ADVERTISEMENT

தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா, தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று பேரம் பேசப்பட்டதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் திருநாவுக்கரசு உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதியதலைமுறை தொலைக்காட்சியில் நெறியாளராக பணியாற்றி வரும் பத்திரிகையாளர் விஜயன் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக நேற்று (15.07.2026) நேரில் ஆஜராக வேண்டும் என்று இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக்குழு அவருடைய அலுவலகத்திற்கு சென்று நேரடியாக சம்மன் வழங்கியுள்ளனர்.
சம்மன் வழங்கிய கையோடு அன்று (15.06.26) இரவே காவல்நிலையத்திற்கு வர வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

காவல்துறையின் அழைப்பின்பேரில் நேற்று இரவு 10 மணியளவில் பத்திரிகையாளர் விஜயன் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்திய காவல்துறையினர் நள்ளிரவு 12.30 மணியளவில் விசாரணையை முடித்துள்ளனர். அதன்பிறகு வீட்டிற்குப் புறப்பட்டு சென்ற பத்திரிகையாளர் விஜயனை மீண்டும் காவல்நிலையத்திற்கு வரச்சொல்லியுள்ளனர்.

நள்ளிரவு 2 மணியளில் விஜயன் மீண்டும் காவல்நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, காவல்துறையினர் எந்தவித சட்ட விதிகளையும், வழிகாட்டுதல்களையும் பின்பற்றாமல் விஜயனின் செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், இன்று (16.07.26) காலை பத்திரிகையாளர் விஜயனை மீண்டும் விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்தனர். விசாரணைக்காக சென்ற விஜயன் அவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை. காவல் நிலையத்திலேயே வைக்கப்பட்டுள்ளார்.

எந்த வழக்காக இருந்தாலும் விசாரணைக்காகவும், சாட்சியம் வழங்கவும் சம்பந்தப்பட்டவர்களை அழைக்க காவல்துறையினருக்கு உரிமை உள்ளது. ஆனால், அதை சட்டத்தின் வழியில், அதன் வரம்பிற்கு உட்பட்டு செய்ய வேண்டும். அதேபோல், விசாரணைக்கு வந்த பத்திரிகையாளரிடம் செல்போனை பறிமுதல் செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

காவல்துறையின் இந்த நடவடிக்கை பத்திரிகையாளர்களை மிரட்டி, பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கையாகவே சென்னை பத்திரிகையாளர் மன்றம் கருதுகிறது.

பத்திரிகையாளர் விஜயனை விசாரணை என்ற பெயரில் உடனடியாக அழைத்துச் சென்றது, வீட்டிற்கு சென்றவரை மீண்டும் அழைத்து எந்தவித விதிகளையும் பின்பற்றாமல் செல்போனை பறித்துள்ளது, மறுநாளும் விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்தில் மணிக் கணக்கில் காக்க வைத்திருப்பது போன்ற அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள காவல்துறையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.

பத்திரிகையாளர் விஜயனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள செல்போனை உடனடியாக காவல்துறை திரும்ப ஒப்படைக்கவும், விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளரை அச்சுறுத்துவதை நிறுத்தவும், அவரை உடனடியாக விடுவிக்க காவல்துறையினருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது. 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share