பழனி கோயில் நில மோசடி வழக்கில் சார்பதிவாளருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை முன் ஜாமின் வழங்கியுள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூபாய் 100 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுத்த புகாரில் பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் முன் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இவருக்கு முன் ஜாமின் வழங்கக்கூடாது என்று கேட்டு பழனி கோயிலின் நில கண்காணிப்பாளர் முருகானந்தம் இணையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இதில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தூய கரங்களுடன் நீதிமன்றத்தை அணுகவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு இன்று (ஜூலை 17) சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த போது, இந்த நிலத்தை பாலச்சந்தர் என்ற பதிவாளர் 3ம் தேதியே பதிவு செய்துவிட்டார். ஆனால் திட்டமிட்டு என்னை மட்டும் குற்றவாளியாக்கி பத்திரப்பதிவு செய்தவரை தப்பிக்க வைத்து விட்டனர் என்று ஜஸ்டின் மணிகண்டன் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
அரசு சார்பில், 3ஆம் தேதி பதிவுக்கான வேலைகள் மட்டுமே நடைபெற்றன. ஜஸ்டின் மணிகண்டன் தான் முறைப்படி பதிவு பணிகளை செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஏற்கனவே பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? இரு சார் பதிவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் தானே? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம் ஜஸ்டின் மணிகண்டனுக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
