மணல் குவாரிகளை விரைவில் திறப்பது தொடர்பாக இன்று துறை ரீதியான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
இன்று (ஜூலை 17) நீர்வளத்துறை தலைமை பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நீர்வளத்துறை தலைமை அலுவலகத்தில், மணல் குவாரிகளை திறப்பது தொடர்பாக அனைத்து பொறியாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னையை சேர்ந்த பொறியாளர்கள் நேரில் கலந்துகொண்ட நிலையில், மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த பொறியாளர்கள் காணொளி வாயிலாக கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், உடனே திறப்பதற்கு எத்தனை மணல் குவாரிகள் தயார் நிலையில் இருக்கின்றன? என தலைமை பொறியாளர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதற்கு பொறியாளர்கள் சார்பில், சுற்றுச் சூழல் அனுமதி பெற்ற நிலையில் 10 குவாரிகள் தயாராக இருக்கின்றன. மேலும் 6, 7 குவாரிகளுக்கு சுற்றுச் சூழல் அனுமதி பெற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தலைமை செயலகத்தில் நீர்வளத்துறை முதன்மை செயலாளர் சத்ய பிரதா சாகு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அப்போது மணல் குவாரிகளை திறப்பது தொடர்பாக கேட்டபோது, ”10 குவாரிகள் சுற்றுச் சூழல் அனுமதியுடன் தயாராக இருக்கிறது. ஆனால், இயந்திரங்களை கொண்டு அள்ளாமல், மனித சக்தி கொண்டுதான் அள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு இருக்கிறது. எனவே இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து ஒரு உத்தரவை பெற்றால் தான் மணல் குவாரிகளை நடத்த முடியும். அதனால் விரைந்து மேல்முறையீட்டு நடவடிக்கையை எடுத்தால் விரைவில் இந்த குவாரிகளை நடத்தலாம்” என்று பொறியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இயந்திரம் இல்லாமல் மணலை அள்ளுவதற்கு வேறு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆலோசித்த போது, அரசு அனுமதி வழங்கினால், மனித சக்தி மூலம் மாட்டு வண்டிகளை கொண்டு ஏற்பாடு செய்யலாம் என்று இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
