ஜாமீன் பெறுவதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதி போல் நடித்து நீதிபதியை அச்சுறுத்த முயன்ற மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருக்கு டெல்லி நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சுகேஷ் சந்திரசேகர் மீது தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களிலும் ஊழல் வழக்குகள் உள்ளன.
கடந்த 2017 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஊழல் வழக்கு ஒன்றில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.
அப்போது கான்ஸ்டபிள் மன்ஜித் என்பவரின் செல்போன் மூலம் டெல்லி சிறப்பு நீதிபதி பூனம் சௌத்ரியின் அதிகாரபூர்வ தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
முதலில் தான் உச்ச நீதிமன்ற நீதிபதியின் தனிச்செயலாளர் என்றும் அதன் பிறகு நீதிபதியே பேசுவதாகவும் சிறப்பு நீதிபதி பூனம் சௌத்ரியிடம் கூறியிருக்கிறார். ஊழல் வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்குமாறு மிரட்டியுள்ளார்.
இந்த சூழலில் நீதிபதி பூனம் சௌத்ரி உச்சநீதிமன்றத்தை தொடர்பு கொண்டு இந்த தொலைபேசி அழைப்பு தொடர்பாக விசாரித்த போது அது மோசடியான அழைப்பு என்பதும் சுகேஷ் சந்திரசேகர் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக டெல்லி சிறப்பு நீதிபதி பூனம் சௌத்ரி அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் விசாரித்து வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹர்ஷிதா மிஸ்ரா, “திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள், குறிப்பாக அவை நீதி நிர்வாகத்திற்கு எதிராக இருந்தால், அந்தக் குற்றத்தின் தீவிரத்துக்கு ஏற்ற கடுமையான தண்டனைகள் கிடைக்கும் என்ற வலுவான செய்தியை இந்த உத்தரவு உணர்த்த வேண்டும். எனவே இந்த வழக்கில் குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையானது அவரை சீர்திருத்துவதை நோக்கமாகக் கொண்டு மட்டுமல்லாமல், நீதி அமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை பாதுகாக்கும் வகையிலும், இது போன்ற எண்ணம் கொண்டவர்களுக்கு சட்டத்தின் கரங்களில் இருந்து தப்ப முடியாது என்ற எச்சரிக்கையை விடுக்கும் வகையிலும் அமைய வேண்டும்” என்று கூறி சுகேஷ் சந்திரசேகருக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார்
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 170 பிரிவின் கீழ் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும், 189 பிரிவின் கீழ் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும், 507இன் பிரிவின் கீழ் நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அபராதத் தொகையை செலுத்த தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த சிறை தண்டனையை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவில் கூறியுள்ளார்
கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி சுகேஷ் சந்திரசேகர் குற்றவாளி என்று அறிவித்த நீதிபதி ஆகஸ்ட் 29ஆம் தேதி தண்டனை விவரத்தை அறிவித்தார்.
இந்த சுகேஷ் சந்திரசேகர் மீது சுமார் 30 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. பெங்களூருவில் 10, சென்னையில் 9, டெல்லியில் 6, மகாராஷ்டிராவில் 2, மற்றும் ஆந்திராவில் 1 வழக்குகள் நிலுவையில் உள்ளன
யார் இந்த சுகேஷ் சந்திரசேகர்?
சுகேஷ் சந்திரசேகர் மீது பல்வேறு வழக்குகள் இருந்தாலும் 2017 ஆம் ஆண்டு தான் தமிழ்நாட்டில் அவரைப் பற்றி பலருக்கும் தெரிய வந்தது.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்டு தரும்படி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் அதை இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலமாக கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதுதான் சுகேஷ் சந்திரசேகர் தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டார்
இதற்கிடையே கடந்த 2008 ஆம் ஆண்டு கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் என்று கூறி பெங்களூருவில் பலரிடம் பணம் மோசடி செய்து அங்கிருந்து ஆந்திராவுக்கு தப்பினார்.
2009 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் இருந்த அவர் முன்னாள் முதல்வராக இருந்த ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டியின் மருமகன் என்று கூறி பலரிடம் மோசடி செய்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வந்த சுகேஷ் சந்திரசேகர் தன்னை முன்னாள் முதல்வர் கலைஞரின் பேரன் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன் என்றும் கூறி மோசடி செய்த விவகாரத்தில் சென்னை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதுபோன்று பிரதமர் அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறேன், பல்வேறு முக்கிய அரசியல்வாதிகளை தெரியும் என கூறி பலரிடம் மோசடி செய்திருக்கிறார்.
இந்த சூழலில் தான் உச்ச நீதிமன்ற நீதிபதி போல் நடித்த இவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
