“NEET” Anitha memorial event: நீட் தேர்வின் கொடூரத்தால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு விஜய் அரசு அனுமதி மறுத்துள்ளதாக அனிதாவின் சகோதரர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அனிதாவின் சகோதரர் மணிரத்னம் தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தங்கை அனிதாவின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள் இன்று. இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று நீட் எதிர்ப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இயக்கங்கள், கட்சிகள், மாணவர் அமைப்புகள் சார்பில் தங்கை அனிதாவின் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, சென்னையில் பெசன்ட் நகர் கடற்கரையில் இன்று மாலை 5 மணிக்கு தங்கை அனிதாவின் நினைவேந்தலை நடத்துவதற்காக, கடந்த 18.08.2026 அன்று சென்னை மாநகராட்சியிடமும், கடந்த 22ஆம் தேதி காவல்துறையிடமும் முறையாக அனுமதி கோரியிருந்தோம்.
எங்களுடைய கோரிக்கை மிகத் தெளிவானது. 100 முதல் 200 பேர் பங்கேற்கும் அமைதியான மெழுகுவர்த்தி நினைவேந்தல். போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ அல்ல.
ஆனால், காவல்துறை எங்களுடைய கோரிக்கையை முறையாகப் பரிசீலிக்காமல், ‘ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை’ என்று கூறி அனுமதி மறுத்துள்ளது. ‘நினைவேந்தல்’ என்ற வார்த்தையைக்கூட அவர்கள் பயன்படுத்தவில்லை.
காரணம் என்னவென்றால், அருகில் திருவிழாக்கள் நடைபெறுவதால் கூட்டம் அதிகமாக இருக்கும் என்கிறார்கள்.
உண்மையில் விடுமுறைநாட்களில் வரும் கூட்டத்தில் கால்பகுதி கூட வாரநாட்களில் கூட்டம் வருவதில்லை
ஆனால், அதே பெசன்ட் நகர் கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் உணவுத் திருவிழாக்களுக்கும், மாரத்தான் உள்ளிட்டபல்வேறு வணிக மற்றும் பொது நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.
100–200 பேர் அமைதியாக ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி, தங்கை அனிதாவை நினைவுகூருவதற்கு மட்டும் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது?

நேற்று இரவு 10.30 மணி வரையிலும் எந்தவித முரண்பாடும் வேண்டாம்; அரசுடன் பேசி, அனுமதியுடன் நினைவேந்தலை நடத்த வேண்டும் என்றுதான் நாங்கள் முயற்சி செய்தோம். ஆனால், கடைசி வரை எங்களை இழுத்தடித்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இது வெறும் அனுமதி மறுப்பு அல்ல. இது எங்களுடைய ஜனநாயக மற்றும் குடிமை உரிமை குறித்த கேள்வி.
நீட் தேர்வை எதிர்க்கிறோம் என்று கூறும் தமிழ்நாடு அரசு, நீட் எதிர்ப்புப் போராட்டத்தின் அடையாளமான தங்கை அனிதாவின் நினைவேந்தலுக்கே அனுமதி மறுப்பது மிகப்பெரிய முரண்பாடு.

முதலமைச்சர் அவர்கள் தங்கை அனிதாவின் மரணத்தைப் பற்றி, “என் கூடப் பிறந்த தங்கை இறந்தபோது ஏற்பட்ட வலியைப் போல நான் உணர்ந்தேன்” என்று கூறியிருந்தார்.
அப்படியானால், இன்று அதே தங்கை அனிதாவின் நினைவேந்தலுக்கு உங்கள் அரசு ஏன் அனுமதி மறுக்கிறது?
நீங்கள் உண்மையில் நீட் தேர்வை எதிர்க்கிறீர்களா?
நீங்கள் உண்மையில் தங்கை அனிதாவின் பக்கம் நிற்கிறீர்களா? என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள் முதல்வரே!
ஏற்கனவே நீட் எதிர்ப்புப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால்தான் நாங்கள் 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். அதன் பின்னர்தான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்றும் நாங்கள் போராட்டம் நடத்த இடம் கேட்கவில்லை.
ஒரு அமைதியான நினைவேந்தலுக்குத்தான் அனுமதி கேட்கிறோம்.
ஆனால், அரசியலமைப்பு வழங்கியுள்ள ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி, எத்தனை அடக்குமுறைகள் தவெக அரசால் மேற்கொள்ளப்பட்டாலும்—
தங்கை அனிதாவின் நினைவேந்தல் திட்டமிட்டபடி இன்று மாலை 5.00 மணிக்கு பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெறும்.
தங்கை அனிதாவின் நினைவு என்பது ஒரு தனிநபரின் நினைவு அல்ல.
அது தமிழ்நாட்டின் கல்வி உரிமையின் நினைவு.
அது சமூக நீதிக்கான போராட்டத்தின் நினைவு.
அது நீட் எதிர்ப்பின் அடையாளம். இவ்வாறு அனிதாவின் சகோதரர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
