CM Vijay to Open Mettur Dam today: காவிரி டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடி பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் விஜய் இன்று (செப்டம்பர் 1) தண்ணீரை திறந்துவிடுகிறார். இதற்காக மேட்டூர் அணை செல்லும் முதல்வர் விஜய்க்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சாலையின் இருபுறமும் “இரும்பு தடுப்பு கம்பிகள்” போடப்பட்டுள்ளன.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி. மேட்டூர் அணையில் 90 அடி நீர் இருப்பு இருக்கும் போது காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட மறுத்ததால் மேட்டூர் அணையில் போதுமான நீர் இல்லை. இதனால் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.
காவிரி மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்றம் அடுத்தடுத்து உத்தரவிட்ட நிலையிலும் கர்நாடகாவில் கனமழை பெய்ததாலும் காவிரி நீர் திறந்துவிடப்பட்டது. இதனையடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்தது.
தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டிய நிலையில் காவிரி டெல்டாவில் சம்பா சாகுபடிக்காக இன்று நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் முதல்வர் விஜய் நீரை திறந்துவிடுகிறார்.
மேட்டூர் அணை செல்லும் முதல்வர் விஜய்க்கு பாதுகாப்பாக சாலைகளில் இரும்பு கம்பி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
