மேட்டூர் அணையை திறப்பதற்காக முதல்வர் விஜய் சென்னையில் இருந்து சேலம் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
மேட்டூர் அணை இன்று (செப்டம்பர் 1) திறக்கப்படுகிறது. வழக்கமாக ஜூன் 12ஆம் தேதி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால் போதிய மழை பெய்யாததாலும், உரிய காவிரி நீர் கிடைக்காததாலும் மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்படுகிறது.
இதையொட்டி முதல்வர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் புறப்பட்டுள்ளார். அங்கிருந்து கார் மூலம் மேட்டூர் வருகிறார்.
முதல்வர் சேலம் வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 1 ஐஜி, 4 டிஐஜிக்கள் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு மேட்டூர் அணை பகுதியில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டில் மேட்டூர் அணை கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுதவிர கட்சி சார்பிலும் ஆங்காங்கே தமிழக வெற்றிக் கழக பேனர்கள், வளைவுகள், போஸ்டர்கள் வைக்கப்பட்டு வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தசூழலில் மேட்டூர் அணைக்கு நேற்று மாலை 11,501 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 10,85 கன அடியாக குறைந்துள்ளது.
தற்போது அணையின் நீர்மட்டம் 91.56 அடியாகவும், நீர் இருப்பு 54.45 டி.எம்.சி.யாகவும் உள்ளது. டெல்டா மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 2,000 கன அடி நீர் திறந்துவிடப்படும் நிலையில், சற்று நேரத்தில் டெல்டா பாசனத்துக்காக நீர் திறந்து வைக்கவுள்ளார் முதல்வர் விஜய்.
