கச்சத்தீவு- காரசார விவாதம்.. தாரைவார்த்ததை நியாயப்படுத்திய காங்கிரஸ்!

Published On:

| By Mathi

Kachchatheevu - Heated Debate

Kachchatheevu – Heated Debate: தமிழக சட்டசபையில் கச்சத்தீவை தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு தாரை வார்த்தது பற்றி காரசார விவாதம் இன்று நடைபெற்றது.

தமிழக சட்டசபையில் இன்று (செப்டம்பர் 2) கச்சத்தீவு பற்றி நடந்த விவாதத்தின் தொகுப்பு:

நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த்: கச்சத்தீவைக் கொடுத்ததே அவர்கள்தான்.

ADVERTISEMENT

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு: கச்சத்தீவு குறித்து இந்த மாமன்றத்தில் பலமுறை விவாதிக்கப்பட்டிருக்கிறது. கச்சத்தீவைக் கொடுத்தது, அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் இருந்த இந்திரா காந்திதான். அது தவறு என்று கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதே இதே சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம். நாம் கொடுக்கவில்லை; அவர்கள் கொடுத்துவிட்டார்கள்.

மாநில அரசு தனது கருத்துகளையும் கோரிக்கைகளையும் ஒன்றிய அரசிடம்தான் தெரிவிக்க முடியும். கச்சத்தீவை மீட்டுத் தருமாறு மீண்டும் மீண்டும் கேட்டோம். ஆனால் இதுவரை கிடைக்கவில்லை. அவ்வளவுதான் உண்மை.

ADVERTISEMENT

சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்: கச்சத்தீவு குறித்த பேச்சு வந்துவிட்டது. இதன் முழு வரலாறும் அனைவருக்கும் தெரிய வேண்டும். அப்போதைய ஒன்றிய அரசு கச்சத்தீவைத் தாரைவார்க்க முயன்றது சரிதான். ஆனால் அப்போது இருந்த தமிழக அரசு என்ன செய்தது? அதைத் தடுக்காமல் இருந்தது ஏன்? மேற்கு வங்கத்தில் இருந்த பேருபாரி பகுதியை அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்குக் கொடுக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது. அப்போது மேற்கு வங்க முதலமைச்சராக இருந்த பி.சி. ராய் நீதிமன்றத்துக்குச் சென்றார். வழக்கை உச்சநீதிமன்றம் வரை கொண்டுசென்று, அந்தப் பகுதியைக் கொடுக்க முடியாத நிலையை உருவாக்கினார்.

ஆனால் இங்கே என்ன நடந்தது? அப்போதைய முதலமைச்சர் கலைஞரிடம் வெளியுறவுத்துறைச் செயலாளர் கேவல் சிங் தனியாகப் பேசியிருக்கிறார். ஒருமுறை அல்ல; இரண்டு முறை ஆலோசனை நடந்திருக்கிறது.

ADVERTISEMENT

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றபோது, திமுக உறுப்பினர் எஸ்.எஸ். மாரிசாமி, “எங்களுக்கு இதுபற்றி எதுவுமே தெரியாது” என்று கூறியிருக்கிறார். ஆனால் பின்னர் பத்திரிகையாளர்கள் கலைஞரிடம் கேட்டபோது, வெளியுறவுத்துறைச் செயலாளர் கேவல் சிங் தன்னிடம் முன்பே பேசியதாக அவர் ஒப்புக்கொண்டார்.

ஒருமுறை அல்ல; இரண்டு முறை கலைஞரிடம் தனியாக ஆலோசிக்கப்பட்ட பிறகுதான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது. கலைஞர் நினைத்திருந்தால் அதைத் தடுத்திருக்க முடியும். பேருபாரியை மேற்கு வங்கத்திலிருந்து கொடுக்காமல் பி.சி. ராய் தடுத்ததுபோல, கலைஞரும் தடுத்திருக்கலாம்.

கேவல் சிங் தனியாக வந்து என்ன பேசினார்? கலைஞருக்கு எதிராக இருந்த வழக்குகளைக் கூறி மிரட்டிப் பணிய வைத்தார்களா? அந்த மிரட்டலுக்கு அவர் பணிந்தாரா?

ஆலடி அருணா “மத்திய அரசு உங்களிடம் ஆலோசித்ததா?” என்று கேட்டபோதுதான், “ஆமாம்; என்னிடம் பேசினார்கள்” என்று கலைஞர் ஒப்புக்கொண்டார். அதுவரை ஆலோசனை நடந்ததையும் அவர் வெளிப்படுத்தவில்லை.

அவர் நினைத்திருந்தால் கச்சத்தீவு தாரைவார்க்கப்படுவதைத் தடுத்திருக்கலாம். இன்று துன்பப்படுபவர்கள் நமது மீனவர்கள். குறிப்பாக ராமநாதபுரம் மீனவர்கள் பல ஆண்டுகளாகக் கஷ்டப்படுகிறார்கள். கேவல் சிங்குடன் என்ன பேசப்பட்டது என்பதை இதுவரை வெளிப்படுத்தவில்லை.

கச்சத்தீவைத் தாரைவார்த்துவிட்டு, இன்று தமிழக மீனவர்களுக்குத் துரோகம் இழைக்கப்பட்டதாகப் பேசுகிறார்கள். இந்த வரலாறு அனைவருக்கும் தெரிய வேண்டும்.

(சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் எழுந்து எதிர்ப்பு தெரிவித்ததால் சபையில் கடும் சலசலப்பு ஏற்பட்டது)

எ.வ. வேலு: சட்டத்துறை அமைச்சர் முழுக்க முழுக்கத் தவறான கருத்தை இந்த மாமன்றத்தில் பதிவு செய்கிறார். அன்றைய தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல்தான் பிரதமராக இருந்த இந்திரா காந்தி கச்சத்தீவை இலங்கை அரசிடம் ஒப்படைத்தார். இதை நாங்கள் பலமுறை சொல்லியிருக்கிறோம்; தீர்மானமும் நிறைவேற்றியிருக்கிறோம்.

“திமுக என்ன செய்தது?” என்று கேட்கிறார்கள். நமக்கு அதிகாரமில்லாத ஒரு விவகாரத்தில் கோரிக்கையை வலியுறுத்தவும் தீர்மானம் நிறைவேற்றவும் முடியும். “எங்களுடைய ஒப்புதலைப் பெறாமல் கச்சத்தீவை அளித்தது தவறு” என்று கூற முடியும். அதைத்தான் திமுக செய்தது.

அப்போதைய மாவட்டத் தலைநகரங்கள் முழுவதும் திமுக சார்பில் கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தச் செய்தி மக்களிடம் கொண்டுசெல்லப்பட்டது. சட்டப்பேரவையிலும் எதிர்ப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கச்சத்தீவை மீட்டுத் தர வேண்டும் என்று இந்திரா காந்திக்குப் பலமுறை கடிதம் அனுப்பினோம். அவருக்குப் பின்னர் வந்த பிரதமர்களிடமும் அதே கோரிக்கையை வைத்தோம். கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் கொள்கை.

சட்டத்துறை அமைச்சர் போகிற போக்கில் குற்றச்சாட்டுகளைச் சொல்லிவிட்டுச் செல்கிறார். ஏன் அப்படிச் செய்கிறார் என்று தெரியவில்லை.

அதிமுக எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம்: கச்சத்தீவு தொடர்பாக ஜெயலலிதா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் மத்திய அரசும் தமிழக அரசும் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டிருந்தன.

ஆனால் தமிழக அரசு சார்பில் எந்தப் பதில் மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை. மத்திய அரசு மட்டும் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், கச்சத்தீவு இலங்கைக்குத்தான் சொந்தம் என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது மத்தியக் கூட்டணி அரசில் திமுகவும் இடம்பெற்றிருந்தது. இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்? இதற்கான ஆவணங்களைப் பேரவைத் தலைவரிடம் அளிக்கத் தயாராக இருக்கிறேன். கச்சத்தீவு விவகாரத்தில் திமுக ஒருதலைபட்சமான நிலைப்பாட்டில் இருந்தது என்பதை அந்தப் பதில் மனுவின் மூலம் தெரிந்துகொள்ளலாம். என்னிடம் ஆதாரம் இருக்கிறது. (இதற்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்)

சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்: அவர்கள் கேட்டதற்குத்தான் பதில் சொல்கிறேன். அப்போதைய நாடாளுமன்ற விவாதத்தில் ஆலடிடி அருணா உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரண் சிங், கச்சத்தீவு விவகாரம் குறித்து அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதியுடன் இந்திய அரசு விரிவான ஆலோசனை நடத்தியதாகக் கூறியுள்ளார்.

“ஒருமுறை அல்ல; குறைந்தது இரண்டு முறை விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது” என்று அவர் திட்டவட்டமாக நாடாளுமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார்.

இதெல்லாம் வெளியான பிறகுதான், “ஆமாம்; என்னிடம் பேசினார்கள்” என்று கலைஞர் ஒப்புக்கொண்டார். அந்த ஆலோசனை குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். மாரிசாமிக்குக்கூட தெரிவிக்கப்படவில்லை. அதனால்தான் அவர் நாடாளுமன்றத்தில், “எங்களுக்கு இதுபற்றி எதுவுமே தெரியாது” என்று கூறியிருக்கிறார்.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சரிடம் இப்படிப்பட்ட முக்கியமான விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டால், அதை உடனடியாக மக்களுக்கும் சட்டப்பேரவைக்கும் தெரிவிக்க வேண்டும். இது கலைஞரின் தனிப்பட்ட விவகாரம் அல்ல; தமிழக மக்களின் விவகாரம். அப்போதே சட்டப்பேரவையைக் கூட்டியிருக்க வேண்டும்.

பேருபாரி விவகாரத்தில் பி.சி. ராய் உச்சநீதிமன்றத்துக்குச் சென்றதுபோல, கச்சத்தீவு விவகாரத்திலும் அப்போதே நீதிமன்றத்தை நாடியிருக்க வேண்டும். எல்லாம் முடிந்து, கச்சத்தீவு கையைவிட்டுப் போன பிறகு தீர்மானம் நிறைவேற்றுவதால் என்ன பயன்?

ஒரு நாட்டின் நிலப்பகுதியை மற்றொரு நாட்டுக்குக் கொடுக்க நாடாளுமன்ற ஒப்புதல் தேவை என்பதை பேருபாரி வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தது. அந்த நடைமுறையைக்கூட ஒன்றிய அரசு பின்பற்றவில்லை. அன்றைய தமிழக முதலமைச்சரும் அதற்குத் துணை நின்றார் என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு.

கச்சத்தீவை தாரைவார்த்தது நியாயம்தான்

காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் தாரகை கத்பர்ட்: கச்சத்தீவு 285 ஏக்கர் பரப்பளவுள்ள தீவு. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அதைக் கொடுத்துவிட்டு, 25 லட்சம் ஏக்கர் பரப்பளவுள்ள வாட்ஜ் பேங்க் கடற்பகுதியில் இந்தியாவுக்கான உரிமையைப் பெற்றிருக்கிறோம்.

இன்று அந்த வாட்ஜ் பேங்க் பகுதியில் உள்ள பெட்ரோலியம் உள்ளிட்ட வளங்களுக்கான உரிமைகள் யாரிடம் இருக்கின்றன? மத்திய அரசிடம்தானே இருக்கின்றன? அதன்மூலம் கிடைக்கும் வருமானம் யாருக்குச் செல்கிறது?

285 ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு தீவைக் கொடுத்துவிட்டு, இந்தியாவுக்காக 25 லட்சம் ஏக்கர் கடற்பகுதியின் உரிமையைப் பெற்றிருக்கிறோம். இதுதான் வரலாறு. முதல் ஒப்பந்தத்தை மட்டும் பேசுபவர்கள் ஏன் 2-வது ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசுவதில்லை? இந்தியாவின் பொருளாதார மண்டலத்தைப் பற்றி ஏன் பேசுவதில்லை?

இதையும் இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன். கச்சத்தீவைக் கொடுத்திருந்தாலும், அதற்குப் பதிலாக மிகப்பெரிய கடற்பகுதியின் உரிமையை இந்தியா பெற்றது என்பதுதான் வரலாறு.

திட்டமிட்ட திசை திருப்பல்- ரீல்ஸ் கண்டென்ட்

திமுக எம்.எல்.ஏ. கோவி. செழியன்: கால்நடை மற்றும் மீன்வளத்துறை குறித்த விவாதம் காலையிலிருந்து சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. இப்போது மணி 4-ஐ நெருங்குகிறது. எங்கள் உறுப்பினர் படகுப் பிரச்சினையைப் பற்றித்தான் பேசினார்.

ஆனால் நீர்வளத்துறை அமைச்சர் திடீரென கச்சத்தீவு விவகாரத்தைத் தொடங்கினார். அதைத் தொடங்கிவிட்டுச் சிரித்துக்கொண்டிருந்த காட்சியையும் பார்த்தோம். பின்னர் சட்டத்துறை அமைச்சர் எழுந்து நீண்ட நேரம் விளக்கம் அளித்தார்.

இதிலிருந்து ஓர் உண்மை புரிகிறது. முறையாகச் சென்றுகொண்டிருக்கும் விவாதத்தைத் திசைதிருப்ப வேண்டுமென்றால், ஒரு தலைப்புச் செய்தியைச் சொல்ல வேண்டும். அதைத் தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் கருத்துச் சொல்ல வேண்டும். நாங்கள் எழுந்து நின்று எதிர்வினையாற்ற வேண்டும்.

அந்தக் காட்சி மட்டும் படம்பிடிக்கப்பட்டு, வெளியே அவர்கள் அமைதியாகப் பேசுவதுபோலவும் திமுக உறுப்பினர்கள் கொந்தளிப்பதுபோலவும் ‘ரீல்ஸ்’ வெளியிடுவதற்காகத்தான் கச்சத்தீவு பிரச்சினையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது விவாதம் அல்ல; திட்டமிட்ட காட்சிப்படுத்தல். இவ்வாறு விவாதம் நடந்தது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share