“விஜய் அரசுக்கு 1 வருடம் டைம் கொடுங்க!” – நடிகர் பிரகாஷ் ராஜ்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள தவெக அரசுக்கு ஒரு வருடம் அவகாசம் தரலாம் என பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று (செப்டம்பர் 20) இன்று திருக்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய் தலைமையிலான தவெக அரசு குறித்த கேள்விக்கு, “புதிய அரசு பொறுப்பேற்று 120 நாட்கள்தான் ஆகிறது. மக்கள் ஒரு மாற்றத்திற்காகவே இந்த அரசைத் தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே, முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை, அதாவது குறைந்தபட்சம் ஒரு வருடமாவது அரசுக்கு அவகாசம் வழங்க வேண்டும். அதற்குள் அவசரப்படுவது சரியல்ல.

ADVERTISEMENT

ஜனநாயகத்தில் மக்கள் ஒருவரைத் தேர்ந்தெடுத்த பிறகு, வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்காதவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அவர்தான் முதலமைச்சர். கடந்த ஆட்சியிலும் போராட்டங்கள் நடைபெற்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோற்றாரா அல்லது தோற்கடிக்கப்பட்டாரா, அல்லது எஸ்.ஐ.ஆர் காரணமா என்பது தெரியவில்லை. மு.க.ஸ்டாலின் மற்றும் பி.டி.ஆர் போன்ற முன்னணி தலைவர்கள் தோல்வியடைந்தது மிகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும்.

ADVERTISEMENT

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக செயற்கையாகத் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம். பொதுவாக ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகள் ஜெயிப்பதில்லை, மாறாக ஆளுங்கட்சிகள்தான் தோற்றுப்போகின்றன. மக்கள் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்து புதிய அரசைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.” என்றார்.

அடுத்த 20 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சிக்கு வர முடியாது என தவெக கூறுவது குறித்தான கேள்விக்கு, “அதைச் சொல்வது அவர்களின் கடமை. யார் சொல்கிறார்கள், யார் செய்கிறார்கள் என்று பார்ப்பதை விட, ஒரு குடிமகனாக நமக்குரிய வேலைகள் நடக்கிறதா என்று பார்த்து கால அவகாசம் கொடுக்க வேண்டும். மோடியை எனக்குப் பிடிக்காது, நான் அவரைத் தேர்ந்தெடுக்கவில்லை என்றாலும், அவர்தான் என் பிரதமர்; அவரை நான் கேள்வி கேட்பேன். அதேபோல், விஜய் அரசுக்கும் ஒரு வருடம் அவகாசம் கொடுத்துப் பார்ப்போம். வேலை நடக்கவில்லை என்றால் கேள்வி கேட்போம்” என்றார்.

ADVERTISEMENT

மக்கள் தான் அரசியல் செய்ய வேண்டும்; தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நமக்கான பணிகளைச் செய்ய வேண்டும். தற்போதைய Gen z இளைஞர்கள் கேள்விகளைக் கேட்கத் தொடங்கியுள்ளனர். ஜனநாயகத்தை மதிப்போம், மக்களின் தீர்ப்பை மதிப்போம், மக்கள் நலப் பணிகள் நடைபெறவில்லை என்றால் தொடர்ந்து கேள்வி கேட்போம்” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share