நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் ஒன்றாக இணைந்து ‘தமிழக மக்கள் கழகம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கி, அதன் கொடியையும் இன்று (செப்டம்பர் 20) அறிமுகம் செய்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், தான் சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் அஜித்குமாரும் கட்சி தொடங்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் அவ்வப்போது கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால், “நான் அரசியலுக்கு வரமாட்டேன்; எனக்கு எந்த அரசியல் கட்சியிலும் ஈடுபாடு இல்லை” என்பதை அஜித்குமார் ஏற்கனவே பொதுவெளியில் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், தனது ரசிகர்களை சுயலாபத்திற்காகப் பயன்படுத்த மாட்டேன் என்றும் அவர் வெளிப்படையாக அறிவித்திருந்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திருவான்மியூர் வாக்குச்சாவடியில் தமிழகத்தின் முதல் நபராக வாக்களித்துவிட்டு வெளியே வந்த அஜித்திடம், “மாற்றம் தேவையா?” எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “தேவையில்லை” என்று அவர் பதில் அளித்ததாகச் சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக, “வாக்களித்துவிட்டு வெளியே வந்தபோது நடிகர் அஜித் எந்தவித அரசியல் கருத்தையும் தெரிவிக்கவில்லை; மாற்றம் தேவையில்லை என்று அவர் கூறவில்லை” என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெளிவுபடுத்தினார்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக முதல்வர் விஜய் லண்டன் சென்றபோது, அஜித் பங்கேற்ற கார் பந்தயத் தொடக்க விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதன் தொடர்ச்சியாக விஜய் அரசுக்கு அஜித் குமார் ரசிகர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வந்தன.
இதன் தொடர்ச்சியாக, உளுந்தூர்பேட்டை பகுதியில் அஜித் ரசிகர்கள் ஒன்றுதிரண்டு ‘தமிழக மக்கள் கழகம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளனர். இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அஜித் ரசிகர் ஒருவர் கூறியதாவது: “தமிழ்நாட்டில் முதல்முறையாக ‘அல்டிமேட்’ அஜித் சாரின் ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்து, 5 லட்சம் பேர் ஒன்று கூடி இந்த ‘தமிழக மக்கள் கழகம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளோம்.
எங்களுக்குப் பிறகு அல்லது எங்களுக்குப் போட்டியாக புதிதாக யாரும் அஜித் சாரின் பெயரைச் சொல்லி அரசியல் கட்சியை ஆரம்பிக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம். அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளாக இணைந்து இந்த இயக்கத்தில் செயல்பட வேண்டும்.
தமிழக முதல்வர் விஜய் சார், அஜித் சாரைப் பார்ப்பதற்காகத்தான் லண்டன் சென்றார்.அதை நாங்கள் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. அஜித் சார் அரசியலுக்கு வரவில்லை; இந்த இயக்கத்தைத் தொடங்கச் சொல்லியும் அவர் கேட்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் உள்ள ரசிகர்களாகிய நாங்களாகத்தான் இந்த அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளோம்.
அவர் அரசியலுக்கு வர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அதற்காகவே ‘மாநிலப் பொதுச்செயலாளர்’ என்ற பதவியை அவருக்காக காலியாக வைத்துள்ளோம். அவர் அரசியலுக்கு வந்தால் இந்த கட்சி அவருக்குச் சமர்ப்பிக்கப்படும். ஒருவேளை அவர் அரசியலுக்கு வரவில்லை என்றால், நாங்கள் தமிழ்நாடு முழுவதும் ரசிகர்களாகவே பயணிப்போம். இக்கட்சியைச் சட்டப்பூர்வமாகப் பதிவுசெய்துள்ளோம்; பதிவு எண் வந்தவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” எனக் கூறினார்.
இதனிடையே, ஏற்கனவே ‘தமிழக மக்கள் கழகம்’ என்ற பெயரில் பத்மநாபன் என்பவர் ஒரு கட்சியைத் தொடங்கியுள்ளார்.

தற்போது அதே பெயரில் அஜித் ரசிகர்கள் புதிய கட்சி தொடங்கியுள்ளது குறித்து அவரிடம் கேட்டபோது, “நாங்கள் ஏற்கனவே கட்சியைத் தொடங்கி, அதைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். தற்போதுதான் அஜித் சாரின் ரசிகர்கள் இதே பெயரில் கட்சி தொடங்கியதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து ஆலோசித்து அடுத்தகட்ட முடிவை அறிவிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
