மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – கமலா கணேசன் தம்பதியின் மூத்த மகளும், திரைப்படத் தயாரிப்பாளருமான சாந்தி நாராயணசாமி செப்டம்பர் 20 அதிகாலை காலமானார்.
சிவாஜி கணேசன் – கமலா தம்பதியினருக்கு ராம்குமார், பிரபு ஆகிய இரு மகன்களும், சாந்தி, ராஜ்வி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். சாந்தியின் கணவர் பெயர் நாராயணசாமி. இவர்களுடைய மகள் சத்தியலட்சுமி ஆவார்.
‘சாந்தி’ பெயரில் உருவான சாம்ராஜ்யம்
சிவாஜி கணேசன் திரையுலகில் வெற்றி பெற்ற நடிகராக வலம் வந்த காலத்தில், 1961-ஆம் ஆண்டு சென்னை அண்ணாசாலையில் தனது மூத்த மகள் ‘சாந்தி’யின் பெயரில், ஒரு தியேட்டரைக் கட்டினார். ஆனந்த் தியேட்டர் அதிபரான ஜி. உமாபதி இதன் பங்குதாரர் ஆவார். அன்றைய சென்னை மாகாண முதலமைச்சர் காமராசரால் 1961-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி இத்திரையரங்கம் திறந்து வைக்கப்பட்டது. குளிர்சாதன வசதியுடன் சென்னையில் தொடங்கப்பட்ட முதல் திரையரங்கம் சாந்தி திரையரங்கம் ஆகும். இதைத்தொடர்ந்து சென்னையின் முக்கிய அடையாளமாக சாந்தி இருந்தது.

இதைத்தொடர்ந்து தஞ்சாவூரில் சிவாஜி குடும்பத்தினர் அமைத்த இரட்டைத் திரையரங்குகளுக்கு, மூத்த மகள் சாந்தி மற்றும் மனைவி கமலா ஆகியோரின் பெயர்களில் ‘சாந்தி’ மற்றும் ‘கமலா’ எனப் பெயரிடப்பட்டது. இத்திரையரங்கப் பணிகளை சிவாஜியின் சகோதரர் வி.சி. சண்முகம் கவனித்து வந்தார்.

திரையுலகப் பங்களிப்பும் சொத்துப் பிரச்சினையும்:
சாந்தி திரைப்படத் தயாரிப்பிலும் முத்திரை பதித்துள்ளார். சிவாஜி கணேசன் நடித்த புகழ்பெற்ற ‘தங்கப்பதக்கம்’ (1974) திரைப்படத்தின் தயாரிப்பில் இவரது பங்களிப்பு முக்கியமானது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஜூலை 21, 2001 அன்றும், அவரது மனைவி கமலா கணேசன் 2007-லும் காலமானார்கள். அவர்களின் மறைவுக்குப் பிறகு, குடும்பச் சொத்துப் பங்கீடு தொடர்பான விவகாரத்தில் சாந்தி நாராயணசாமி மற்றும் அவரது சகோதரி ராஜ்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது குறிப்பிடத்தக்கது.
சாந்தி நாராயணசாமியின் மறைவுக்குத் திரையுலகினரும், ரசிகர்களும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
