பிக்பாஸில் விஜய்யை விமர்சித்தேனா? நடிகர் விஜய் சேதுபதி சொல்வது என்ன?

Published On:

| By Mathi

Vijay on Bigg Boss? Vijay Sethupathi Responds

பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் முதல்வரும் தவெக தலைவருமான விஜய்யை விமர்சித்ததாக எழுந்த சர்ச்சை குறித்து நடிகர் விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியை தொகுத்து வங்கும் நடிகர் விஜய் சேதுபதி கடந்த வாரம் போட்டியாளர்களிடையே பேசுகையில், “லீடர்னா என்னன்னே தெரியாமல், லீடர்ஷிப்னா என்னன்னு புரியாமல், வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்சினைகளும் பொறுப்புகளும் வரும்போது எதிரணி மீது பழியைத் தூக்கிப் போட்டுவிட்டு, அங்கிருந்து தெறித்து ஓடுவது ஒரு லீடருக்கான குவாலிட்டி இல்லை. அது ஏமாற்றுவேலை” என குறிப்பிட்டிருந்தார்.

ADVERTISEMENT

முதல்வர் விஜய்யைதான் நடிகர் விஜய் சேதுபதி மறைமுகமாக விமர்சித்திருப்பதாக சர்ச்சை வெடித்தது. தவெக எம்.எல்.ஏ.க்களும் விஜய் சேதுபதிக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் விஜய் டிவி தரப்பில் ஒரு விளக்கம் தரப்பட்டது. அதில் “நிகழ்ச்சியில் இடம்பெறும் எந்தக் கருத்தும், நிகழ்ச்சிக்கு வெளியே உள்ள தனிநபர், அமைப்பு, நிறுவனம், கொள்கை அல்லது சம்பவத்தை ஆதரிப்பதாகவோ விமர்சிப்பதாகவோ கருதக்கூடாது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் வார இறுதி நாளான இன்று மீண்டும் பிக்பாஸ் போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி உரையாட இருக்கிறார். இதனையொட்டி விஜய் டிவி வெளியிட்ட புரோமோவில் பேசும் விஜய் சேதுபதி, “ இந்த மேடையில நாங்க பேசுற கருத்துகள் எல்லாமே இந்த வீட்ல இருக்கிற போட்டியாளர்களுக்கும் எங்களுக்குமானது மட்டுமே. இது வெளியே இருக்கும் யாரையும் எந்த அமைப்பையும் சார்ந்து குறிப்பிடுபவை அல்ல என்பதை திட்டவட்டமாக தெரிவித்து கொள்கிறோம். இதை நான் சொல்லாமலே உங்களுக்கு எல்லாம் புரிஞ்சிருக்கும்னு நினைச்சேன்.. இதை போன வாரம் சொல்லி இருக்கனும். இப்ப சொல்ல வேண்டிய தேவையாகிப் போச்சு.. அதனால் சொல்கிறோம்” என விளக்கம் அளித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share