பிக்பாஸில் விஜய்யை விஜய் சேதுபதி விமர்சித்ததாக சர்ச்சை.. விஜய் டிவி விளக்கம்!

Published On:

| By Mathi

Big Boss-Vijay Sethupathi- Vijay

Vijay TV Issues Clarification: விஜய் டிவி- ஜியோ ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியை தொகுத்து வரும் நடிகர் விஜய் சேதுபதி, முதல்வர் விஜய் குறித்து விமர்சனத்தை முன்வைத்ததாக சர்ச்சை எழுந்த நிலையில் விஜய் டிவி நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 10-ல் கடந்த 12-ந் தேதி பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “ லீடர்னா என்னன்னே தெரியாமல், லீடர்ஷிப்னா என்னன்னு புரியாமல், வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்சினைகளும் பொறுப்புகளும் வரும்போது எதிரணி மீது பழியைத் தூக்கிப் போட்டுவிட்டு, அங்கிருந்து தெறித்து ஓடுவது ஒரு லீடருக்கான குவாலிட்டி இல்லை. அது ஏமாற்றுவேலை” என விமர்சித்திருந்தார்.

ADVERTISEMENT

இந்த செய்தியை நமது மின்னம்பலம்தான் செப்டம்பர் 12-ந் தேதி இரவு 11.12 மணிக்கே முதன் முதலில் வெளியிட்டது. இதனையடுத்து பிற ஊடகங்களும் நேற்று செப்டம்பர் 13-ந் தேதி வெளியிட்டன. சமூக வலைதளங்களிலும் இந்த விவகாரம் மிகப் பெரும் சர்ச்சையானது.

இந்நிலையில் விஜய் டிவி இன்று செப்டம்பர் 14-ந் தேதி இரவு வெளியிட்ட விளக்க அறிக்கை: பிக்பாஸ் தமிழ் சீசன் 10 ஏற்கெனவே வகுக்கப்பட்ட விதிமுறைகள், கருப்பொருள் மற்றும் விளையாட்டுச் சூழலுக்கு உட்பட்ட ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும்.

ADVERTISEMENT

இதில் இடம்பெறும் சம்பவங்கள், உரையாடல்கள், கருத்துகள் மற்றும் போட்டியாளர்களின் செயல்பாடுகள் அனைத்தும் நிகழ்ச்சியின் சூழலில் மட்டுமே புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

நிகழ்ச்சியில் இடம்பெறும் எந்தக் கருத்தும், நிகழ்ச்சிக்கு வெளியே உள்ள தனிநபர், அமைப்பு, நிறுவனம், கொள்கை அல்லது சம்பவத்தை ஆதரிப்பதாகவோ விமர்சிப்பதாகவோ கருதக்கூடாது.

ADVERTISEMENT

நிகழ்ச்சியின் பொழுதுபோக்கு நோக்கத்திற்கு அப்பாற்பட்ட எந்த விளக்கத்தையும் தொடர்புபடுத்தலையும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் ஆதரிக்கவில்லை. இவ்வாறு விஜய் டிவி விளக்கம் அளித்துள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share