முதல்வர் பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும், தவறான செய்திகளைச் சொல்லியுள்ளார் என்று சொன்னபோது, பேரவைத் தலைவர் மறுத்த காரணத்தால் இன்று திமுக வெளிநடப்பு செய்துள்ளது என முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.என் நேரு, “காவல்துறை மானியத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் தராமல், வேண்டும் என்றே திராவிட முன்னேற்றக் கழகத்தை அசிங்கப்படுத்தும் நோக்கத்தோடு பொய்யான செய்திகளை ஒரு மணி நேரம் சினிமா பாணியில் முதல்வர் விஜய் சொல்லி முடித்தார். நாங்கள் பேரவைத் தலைவரிடம் அவர் சொன்னதற்குப் பதில் சொல்ல வேண்டும் என்று கேட்டோம்; பேரவைத் தலைவர் எங்களுக்கு அனுமதி மறுத்துவிட்டார்.
ஏற்கனவே இருந்த வழக்குகளைப் பற்றியெல்லாம் சொல்கிறார்; மிசாவைப் பற்றியும், ED யைப் பற்றியும் பேசுகின்றார்; ஆனால் அதற்குப் பதிலளிக்கப் பேரவைத் தலைவர் அனுமதி மறுத்துவிட்டார். இன்றைக்கு விளக்கம் கேட்டோம்; மாண்புமிகு முதல்வர் பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும், தவறான செய்திகளைச் சொல்லியுள்ளார் என்று சொன்னபோது, பேரவைத் தலைவர் மறுத்த காரணத்தால் இன்று வெளிநடப்பு செய்திருக்கிறோம்” என்றார்.
