பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலித்த டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக போராட்டம் நடத்திய 40 மேற்பார்வையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,
டாஸ்மாக் ஊழியர்களுக்கு சமீபத்தில் தமிழக அரசு ஊதிய உயர்வை அறிவித்தது.
இதன் மூலம் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படும் பிரச்சனைக்கு முடிவு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் கூடுதல் பணம் வசூலிப்பது தொடர்ந்தது.
இந்த நிலையில், ”கூடுதல் விலைக்கு மது விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள்” என்று மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் எச்சரித்தார்.
’கூடுதலாக மதுபானங்கள் விற்று முதன் முறையாக பிடிபட்டால் அவர்கள் ஒரு மாதம் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். இரண்டாவது முறையாக கண்டறியப்பட்டால் மூன்று மாதம் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். மூன்றாவது முறையாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டால் நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதே சமயம் கூடுதல் பணம் வசூலிப்பது தொடர்பாக மது பிரியர்கள் எளிதில் தெரிவிக்க தமிழக அரசு சேவை மையத்தையும் தொடங்கியது.
இந்த சேவை மையத்துக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன.
இதன் அடிப்படையில் மொத்தமாக 217 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டனர்.
இது மற்ற ஊழியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் டாஸ்மாக் ஊழியர்கள் ஆங்காங்கே வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக 2000 டாஸ்மாக் ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும். இல்லை என்றால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்திருந்தது.
இந்த சூழலில் கடைகளை அடைத்து போராட்டம் நடத்திய விவகாரத்தில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் 40 பேர் இன்று தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கோவையில் இன்று (செப்டம்பர் 5) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விக்னேஷ், “கடையை அடைத்தவர்கள் மீண்டும் இன்று கடையை திறக்க ஆரம்பித்து விட்டார்கள்.
யாரையும் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. பணிக்கு வராதவர்கள் மீது சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
தவறு யார் செய்தாலும் தண்டனை கடுமையாக இருக்கும்.
இன்று இந்த போராட்டங்களுக்கு எல்லாம் யார் காரணம், அவர்கள் இரண்டு பேர் (திமுக, அதிமுக) தான். அன்று அவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று இவ்வளவு தூரம் வந்திருக்காது. இது ஒரு உதாரணம்தான்” என்று கூறினார்.
