மகாராஷ்டிரா மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் மாவட்ட மகளிர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இங்குள்ள புதிய கட்டிடத்தில் உள்ள சிறப்பு பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவில், ஆகஸ்ட் 24ஆம் தேதி அதிகாலை 3:30 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் மூன்று பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தன.
சிறப்பு பராமரிப்பு பிரிவல் இருந்த வெண்டிலேட்டர் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டு மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியிருக்கிறது.
இந்த சூழலில் மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக செயல்பட்டு அந்த பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்ற குழந்தைகளை பாதுகாப்பான இடங்களுக்கு தூக்கி சென்றனர்.
மூன்றாவது மாடியில் செயல்பட்டு இந்த சிறப்பு பிரிவில் மொத்தம் 39 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தன. சுகாதாரப் பணியாளர்களும் செவிலியர்களும் குழந்தைகளை வேக வேகமாக தூக்கிச் சென்ற போதும் புகைமூட்டம் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு இந்த மூன்று குழந்தைகளும் உயிரிழந்துள்ளன. மேலும் சில குழந்தைகளுக்கு உயர்மட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு குழந்தையின் உடல்நிலை தீக்காயங்களுடன் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
பிறந்த குழந்தைகளை தாய்மார்கள் தூக்கி கொஞ்சுவதற்குள்ளாகவே இப்படி ஒரு பயங்கரம் நடந்தது அவர்களது குடும்பத்தினரையும் மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஓராண்டுக்கு முன்புதான் இந்த சிறப்பு பிரிவு புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது. குறை மாதத்தில் பிறந்த குழந்தைகள், எடை குறைவாக உள்ள குழந்தைகள், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள குழந்தைகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றன.
இந்த சூழலில் அதிகவனமாக இருக்க வேண்டிய இந்த சிறப்பு பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.
சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே மாவட்ட மகளிர் மருத்துவமனையில் பழைய கட்டிடத்தில் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
