கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், கோவை மற்றும் சென்னை திருவொற்றியூர் மாணவர்கள் படுகொலை சம்பவங்கள் தொடர்பாக விவாதிக்க கோரி சட்டசபையில் திமுக, அதிமுக, பாமக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்துள்ளன.
சட்டசபையில் இன்று ஆகஸ்ட் 17-ந் தேதி திமுக கொறடா எ.வ.வேலு, கோவை அமுதன் கொலை, கர்நாடகாவில் 3 தமிழர்கள் படுகொலை, திருவொற்றியூரில் மாணவர் தனுஷ்குமார் படுகொலை, மேகமலை மக்கள் வெளியேற்றம், சென்னையில் 400 மடங்கு சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் ஆகியவை தொடர்பாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அப்போது சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், கோவை மாணவர் கொலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கொடுத்த தீர்மானம் மீது இன்று பேச அனுமதிக்கப்பட்டுள்ளது; மற்றவை குறித்து பேச அனுமதி தரப்படும் என்றார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கர்நாடகா வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் நிலைமை; எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கொத்து கொத்தாக மீன்கள் இறந்தது” தொடர்பாக விவாதிக்க அனுமதிக்க கோரினார்.
பாமக எம்.எல்.ஏ. கணேஷ்குமார், “கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், கோவை- திருவொற்றியூர் மாணவர்கள் கொலை, கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் கொத்து கொத்தாக இறந்தது” ஆகியவை குறித்து பேரவையின் கவனத்துக்கு கொண்டு வரப்படுவதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்த பிரச்சனைகள் தொடர்பாக அமைச்சர்களின் பதில்களை பெற்று உரிய நேரத்தில் அவையில் தெரிவிக்கப்படும் என்றார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்.
