தமிழக பட்ஜெட்டில் சமூக நீதித் துறைக்கு ரூ.3,937 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.
இதுகுறித்து இன்று (ஆகஸ்ட் 5) தாக்கல் செய்யப்படும் 2026 – 27ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “புகழ்பெற்ற சர்வதேச பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பயனடையும் வகையில் செயல்படுத்தப்படும் அண்ணல் அம்பேத்கர் அயல் நாட்டுக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்’ மூலம், ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக 36 இலட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பாண்டில், இத்திட்டத்தின் கீழ் 362 மாணவர்கள் பயன்பெறும் வகையில், முன்னெப்போதும் இல்லாத அளவில் 131 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதையும், நிலையான வளர்ச்சியையும் உறுதிசெய்ய வெற்றி தொழில் முனைவோர் திட்டம்’ செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம், பயனாளிகள் மொத்தத் திட்டச் செலவில் மூலதன மானியமும், வட்டி மானியமும் பெற ஏதுவாக, நடப்பு நிதியாண்டில் 75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்திற்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்’ மூலம் பழங்குடியினருக்கிடையே ஆதிதிராவிடர் மற்றும் தொழில் முனைவுத்திறனை ஊக்குவிக்கும் நோக்கில், மூலதன மானியம் மற்றும் கடன் வழங்கப்பட்டு, அத்தொழில் முனைவோருக்கு ஆதரவு அளித்து, அவர்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் தன்னிறைவை உள்ளடக்கிய வளர்ச்சியினை அடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இத்திட்டத்திற்காக 165 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன், மண்ணின் மகள்’ திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு விவசாயம் செய்திடத் தேவையான நவீன தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படும். திருத்த வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்கு 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கடு செய்யப்படுகிறது.
நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் குடியிருப்புகளில், அவர்களின் முழுமையான சமூகப் பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டும் எனும் நோக்கத்தில், அயோத்திதாசப் பண்டிதர் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை உட்கட்டமைப்புகளை விரிவாக மேம்படுத்துவதிலும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும், இத்திட்டம் முழுமையாக கவனம் செலுத்தும். திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்கு 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பழங்குடியினர் குடியிருப்புகளில் வீடுகள், சாலைகள், குடிநீர், தெரு விளக்குகள், வாழ்வாதாரத் திட்டங்கள், சுகாதாரக் கட்டமைப்புகள், கல்வி நலன் சார்ந்த உதவித்தொகைத் திட்டங்கள், பள்ளி மற்றும் விடுதி மேம்பாடு உள்ளிட்ட அடிப்படை வசதி மேம்படுத்தும் நோக்கில், ஆன்றோர் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், நடப்பு நிதியாண்டில் 250 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், பழங்குடியினர் குடியிருப்புகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
ஆதிதிராவிடர்களுக்கான சிறப்புக் கூறுகள் திட்டத்தின் கீழ் 25,225 கோடி ரூபாயும், பழங்குடியினருக்கான துணைத் திட்டத்தின் கீழ் 2,079 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் சமூகநீதித் துறைக்கு 3,937 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன்
தமிழ்நாட்டில் சமூகநீதியைக் காப்பதில் அரசு உறுதியுடன் உள்ளது. தமிழ்நாட்டின் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்கள், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியை எவ்வித தடையுமின்றி தொடர்ந்திட, 372 கோடி ரூபாய் பள்ளிப்படிப்பு மற்றும் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்காகவும், 77 கோடி ரூபாய் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்திற்கும், 13.41கோடி ரூபாய் கல்வி இடைநிற்றலைத் தவிர்க்கும் பொருட்டு மாணவிகளுக்கு வழங்கும் ஊக்கத்தொகைக்காகவும் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
