பள்ளிகளில் இனி இதற்கெல்லாம் முற்றிலும் தடை! – தமிழக அரசு உத்தரவு!

Published On:

| By Pandeeswari Gurusamy

IPS

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி வளாகங்களிலும் அரசியல், மதம் மற்றும் சாதி அமைப்புகளின் கூட்டங்களை நடத்தக் கூடாது எனப் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் ரீல்ஸ் எடுப்பது, வகுப்பறைகளில் முதல்வர் விஜய்யின் புகைப்படத்தை வைப்பது எனப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. சிவகாசி அரசுப் பள்ளியில் ஆய்வுக்குச் சென்ற தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, அரசுப் பள்ளி மாணவியிடம் பேசிய வீடியோ வெளியானதும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

ADVERTISEMENT

அதேபோல் கோவை பீளமேடு காந்திமாநகர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த சில நாட்களுக்கு முன், அதே பகுதியைச் சேர்ந்த சிறுவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சாகா பயிற்சி வழங்கப்பட்டது. ஏற்கனவே இதேபோல கோவை மாநகராட்சி பள்ளி மைதானத்தில் சாகா பயிற்சி வழங்கியதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இதுபோன்ற நிகழ்வுகளுக்குத் தடை விதித்து கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

இந்நிலையில், கோவையில் மீண்டும் அரசுப் பள்ளி மைதானத்தில் சாகா பயிற்சி வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என குற்றம் சாட்டி சி.பி.ஐ. (எம்.எல்.) உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள், கோவை மாநகரக் காவல் ஆணையர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் புகார் மனு அளித்தன.

ADVERTISEMENT

இந்நிலையில், “தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி வளாகங்களிலும் அரசியல், மதம் மற்றும் சாதி அமைப்புகளின் கூட்டங்களை நடத்த அனுமதி அளித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

ADVERTISEMENT
  • தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளின் வளாகத்திலும் அரசியல் கட்சிகள், மத அமைப்புகள், சாதி சங்கங்களின் நிகழ்ச்சிகளை நடத்தத் தடை விதிக்கப்படுகிறது. பள்ளி விடுமுறை நாட்களிலும் இது பொருந்தும்.
  • எந்தக் காரணத்தைக் கொண்டும், பள்ளி வளாகத்தை அரசியல் அல்லது மதச் செயல்பாடுகளுக்கு வாடகைக்கோ அல்லது இலவசமாகவோ வழங்கக் கூடாது.
  • அரசு நலத்திட்ட விழாக்கள் மற்றும் அரசின் அதிகாரப்பூர்வ பணிகளுக்கு மட்டுமே பள்ளி வளாகத்தைப் பயன்படுத்த வேண்டும்.
  • பள்ளி சுவர் மற்றும் வளாகத்தில் அரசியல், மதம் சார்ந்த சுவரொட்டிகள், விளம்பரங்கள், கொடிக்கம்பங்கள், சின்னங்கள் வைப்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
  • பள்ளி தலைமை ஆசிரியர்கள் அல்லது பள்ளி நிர்வாகிகள், அரசாணையை மீறி அரசியல், மத நிகழ்வுகளுக்கு அனுமதி அளித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கையும் சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share