ஈபிஎஸ் அதிருப்தியாளர்கள் அணியில் விரிசலா? தங்கமணி எடுத்த அதிரடி முடிவால் பரபரப்பு!

Published On:

| By Pandeeswari Gurusamy

வேலுமணி தலைமையிலான எடப்பாடி அதிருப்தியாளர்களுக்குள் விரிசல் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. எஸ். பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் இன்று அதிமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காத நிலையில், சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டது அதிமுக வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தவெக அரசு தேர்தல் வாக்குறுதியின்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாததைக் கண்டித்தும், மேகதாது அணை விவகாரத்தில் மெத்தனமாகச் செயல்படுவதைக் கண்டித்தும், அதிமுக சார்பில் சென்னை நீங்கலாகத் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இன்று அதிமுக சார்ப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

தஞ்சாவூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று நடத்தினார். முன்னதாக எந்தெந்த மாவட்டங்களில் யார் யார் தலைமையேற்றுப் போராட்டத்தை நடத்துவார்கள் என்ற அதிமுக தலைமை நிர்வாகிகளின் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், சொந்த மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்தை நடத்த அனுமதி அளிக்கப்படாததால், அதில் பங்கேற்க முடியாது எனத் தெரிவித்து முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கூட்டாக எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தனர்.

ADVERTISEMENT

ஆனால், எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளராகக் கருதப்படும் முன்னாள் அமைச்சர் தங்கமணி, அதிமுக தலைமையின் அறிவிப்பின்படி சேலத்தில் நடைபெற்று வரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். தங்கமணியின் சொந்த மாவட்டம் நாமக்கல் என்பதால், அவருக்கும் சொந்த மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்த வாய்ப்பு வழங்கப்படாமல் சேலம் மாவட்டத்தில் பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் இன்று நடந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்த நிலையில், தங்கமணி தலைமை அறிவித்தபடி சேலம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படும் நிர்வாகிகளிடையே பிளவு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் போராட்டத்தைப் புறக்கணித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளிப்பதை எடப்பாடி பழனிசாமி தவிர்த்துவிட்டார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share