சட்டமன்றத்தில் விஜய் – சங்கீதா ஆன்லைனில் ஆஜர் : விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

Published On:

| By Kavi

முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கருத்து மோதல் நீடித்து வந்தது.

ADVERTISEMENT

இந்தநிலையில் கடந்த டிசம்பர் மாதம் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதா மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் இருவரும் ஏப்ரல் 20ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் இருவரும் ஆஜராகததால் வழக்கு ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

அன்றைய தினம் இருவரது சார்பிலும் காணொளி காட்சி மூலம் ஆஜராக அனுமதியளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

அதன்படி வழக்கு இன்று (ஆகஸ்ட் 7) விசாரணைக்கு வந்தபோது, லண்டனில் இருந்து காணொளி மூலம் சங்கீதா ஆஜரானார். சட்டமன்ற கூட்டத்தொடர் நடப்பதால் விஜய் ஆஜராகவில்லை.

ADVERTISEMENT

அவரது சார்பில் வழக்கறிஞர் ஆஜரானார்கள். அறையின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு விசாரணை நடந்தது. சட்டமன்றம் நடப்பதால் விஜய் ஆஜராகவில்லை என்றும் வேறொரு நாளைக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அவரது சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சங்கீதா இன்றே விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். சுமார் 20 நிமிடங்கள் சங்கீதா தனது வாதங்களை முன்வைத்தார். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை நீதிபதி சுஜாதா, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இன்று மாலைக்குள் அடுத்த விசாரணை தேதி தெரிவிக்கப்படும் என்று வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share