சவூதியில் மீனவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஐந்து நாட்கள் ஆன நிலையிலும், அதனைச் சட்டமன்றத்தில் விவாதிக்க அவைத்தலைவர் மறுப்பு தெரிவித்ததால், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (ஆகஸ்ட் 19) அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், “சட்டப்பேரவை விதி எண் 55-ன் கீழ் கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் நோட்டீஸ் கொடுத்து ஐந்து நாட்கள் ஆகின்றன. ஐந்து நாட்களாக இந்தக் கவன ஈர்ப்புத் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இது மிகவும் முக்கியமான கவன ஈர்ப்புத் தீர்மானம். 12.08.2026 அன்று மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் ஊராட்சி, தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் நான்கு பேர் சவுதி அரேபியாவில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். இவர்களை ஈரானியக் கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மாவீரன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் பால்ராஜ், சங்கர், மணிகண்டன் ஆகியோர் படுகாயங்களுடன் சவுதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இறந்தவர் உடலைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வரவும், காயம்பட்டவர்களை மீட்டு அவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளித்து, அவர்களது குடும்பத்திற்குத் தகுந்த வாழ்வாதார உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்குக் கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொடுத்தோம். ‘தமிழர்களைக் காப்போம்’ என்று வாயளவில் பேசும் இந்த அரசு, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் நான்கு பேர் மீது சவுதியில் தாக்குதல் நடத்தப்பட்டு ஒருவர் இறந்துள்ள நிலையில், அவரது உடலைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல முயன்றபோது, சபாநாயகர் சட்டமன்றத்தில் அனுமதி கொடுக்க மறுக்கிறார். அதனால்தான் நாங்கள் வெளிநடப்பு செய்தோம்.
இவர்கள் எப்படித் தமிழ்நாட்டு மக்களைக் காக்கப் போகிறார்கள்? ஒரு தமிழன் எங்கே இருந்தாலும் பாதிக்கப்பட்டால் அவர்களுக்குக் குரல் கொடுப்பதுதான் அரசினுடைய கடமையாகக் கடந்த காலத்தில் இருந்தது. ஆனால் இன்று தமிழனுக்குப் பாதுகாப்பும் இல்லை. வெளிநாட்டில் சுட்டுக்கொல்லப்பட்டு அந்த உடல் சவுதியிலேயே ஒரு வாரமாகக் கிடக்கிறது. அந்த உடலைத் தமிழகத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் தான் கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொடுத்தோம்” என்றார்.
அதேபோல், தமிழக – கர்நாடக எல்லைப் பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், அதற்கும் இரண்டு நாட்கள் போராடி வாதாடி (அனுமதி) வாங்கினோம். இவர்கள் எங்கு தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்றப் போகிறார்கள்? வெளி மாநிலங்களில் இருந்தாலும் சரி, வெளிநாட்டில் இருந்தாலும் சரி, தமிழர்கள் பாதிக்கப்படும்போது உடனுக்குடன் அதிமுக அல்லது திமுக என எந்த அரசாக இருந்தாலும், பூஜ்ய நேரத்தில் பேசி உடனடியாக அதற்குத் தீர்வு காண்பார்கள்.
ஆனால், இந்த அரசு அதைப்பற்றிக் கவலைப்படுவதே இல்லை. மிக மோசமான சூழலில் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதைக்கூட உணராத அரசு இது. இந்த அரசில் தமிழ் உணர்வு என்பதே இல்லை”என்றார்.
