சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: ஜெம் வீரமணியின் கூட்டாளிகளும் கைது

Published On:

| By Pandeeswari Gurusamy

சிறுமிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு புகாரின் பேரில், தொழிலதிபர் வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகளான சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிக்மன் ஆகியோர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள பாலியல் தடுப்புப் பிரிவு ஆய்வாளரைத் தொடர்புகொண்டு ரகசிய புகார் ஒன்றை அளித்தார். அதில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது அலுவலகத்திற்கு வந்து பென்டிரைவ் ஒன்றைக் கொடுத்ததாகவும், அதில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் காட்சிகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

ADVERTISEMENT

இதையடுத்து காவல்துறையினர் அந்த வீடியோவை ஆய்வு செய்தனர். அதில் முதியவர் ஒருவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதுகுறித்து அக்டோபர் 7-ம் தேதி போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.

விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. இதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் பிரபல கிரானைட் தொழிலதிபரும், ஜெம் குழுமத்தின் தலைவருமான வீரமணி (84) என்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதைடுத்து காவல் துறையினர் விசாரணையில் வீரமணி தேனாம்பேட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதன் நிர்வாகத்தை சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிக்மனிடம் ஒப்படைத்திருந்தது தெரியவந்துள்ளது. அந்த வீட்டின் படுக்கையறைக்கு பல சிறுமிகள் அழைத்து வரப்பட்டு, பாலியல் குற்றங்களுக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

விசாரணையின் ஒரு பகுதியாக, சிறுமிகளில் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதற்கான வீடியோ ஆதாரங்களையும் காவல்துறையினர் கைப்பற்றினர். அதைத்தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் தொடர்புடைய பிற இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் வழக்குக்குத் தொடர்புடைய பல ஆவணங்கள் மற்றும் பிற சிறுமிகள், பெண்களின் உடைமைகள் போன்றவையும் விசாரணையில் மீட்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து தொழிலதிபர் வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிக்மன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வழக்கில் சிறுமிகள் சம்பந்தப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் உள்ளிட்ட விவரங்களைக் காவல்துறை வெளியிடவில்லை.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் கைது செய்யப்பட்டுள்ள வீரமணி உள்ளிட்டோர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share