எக்ஸ்போ ‘பஞ்சாயத்து’: அமைச்சர் அருண்ராஜ் மீது ‘பிக்பாஸ்’ நடிகை தாமரைச்செல்வி சரமாரி புகார்… கதறல் வீடியோ!

Published On:

| By Mathi

BigBoss-Thamarai Selvi

பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றவரும் நடிகையுமான தாமரைச்செல்வி, திருச்செங்கோட்டில் சிறு வணிகர்களின் “எக்ஸ்போ” நடத்துவதற்கு உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றும் நிகழ்ச்சியை நடத்தவிடாமல் தடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

“தேர்தலின்போது அமைச்சர் அருண்ராஜுக்காக தூங்கிக் கொண்டிருந்தவர்களைக்கூட எழுப்பி ஓட்டு கேட்டேன். நானும் தவெகவைச் சேர்ந்தவள்தான். ஒரு மாதமாக அவரைச் சந்திக்க முயன்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எங்களை நம்பி வந்த சிறு வியாபாரிகள் என்ன செய்வார்கள்?” என்று தாமரைச்செல்வி வீடியோ வெளியிட்டு வேதனை தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

’பிக்பாஸ்’ தாமரைச் செல்வி வெளியிட்டுள்ள வீடியோ: வணக்கம் திருச்செங்கோடு மக்களே. இந்த வீடியோ அருண்ராஜ் சார், சுகாதாரத்துறை அமைச்சர் சார் உங்களுக்காகத்தான்.

உங்களையும் உங்கள் ஊரையும் நம்பித்தான் இந்த ஊரில் எக்ஸ்போ நடத்த வந்தோம். நானும் தவெகவைச் சேர்ந்தவள்தான். தேர்தலின்போது உங்களுக்காகப் பிரச்சாரம் செய்திருக்கிறேன். தூங்கிக் கொண்டிருந்தவர்களைக்கூட எழுப்பி, ‘அருண்ராஜ் சார் நல்லவர்; அவருக்கு வாக்களித்தால் மக்களுக்கு நல்லது செய்வார்’ என்று ஓட்டு கேட்டிருக்கிறேன்.

ADVERTISEMENT

அதை நம்பித்தான் திருச்செங்கோட்டில் உள்ள செங்குந்தர் திருமண மண்டபத்தில் எக்ஸ்போ நடத்துவதற்காக ஐந்து, ஆறு முறை முன்பதிவு செய்தோம். ஆனால் காவல்நிலையத்தில் அனுமதி கிடைக்கவில்லை. பெரிய கடைகள் வைத்திருப்பவர்கள் நாங்கள் எக்ஸ்போ நடத்தக்கூடாது என்று புகார் கொடுத்ததாகக் கூறப்பட்டது. அதனால் உயர் நீதிமன்றத்துக்குச் சென்று அனுமதி பெற்றோம்.

அதன்பிறகும் ஒரு மாதமாக உங்களைச் சந்திக்க முயற்சி செய்தோம். உங்கள் சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்கள் முதல் உங்கள் பி.ஏ. வரை அனைவரிடமும் முயற்சி செய்தோம். ஆனால் எங்களைச் சந்திக்காமலேயே, ‘வேண்டாம்; சரியில்லை என்றால் கேன்சல் செய்துவிடுங்கள்’ என்று சொல்லிவிட்டதாகத் தெரியவந்தது.

ADVERTISEMENT

நான் 22 ஆண்டுகள் தெருக்கூத்தாடியாக இருந்தவள். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். என்னைப் போலவே கஷ்டப்பட்டு முன்னேற நினைக்கும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ரூ.2,000, ரூ.3,000-க்கு பொருட்களை வாங்கி வந்து வியாபாரம் செய்பவர்களும் இருக்கிறார்கள். பலருக்கு நான் இலவசமாக ஸ்டால் கொடுத்திருக்கிறேன். மாற்றுத்திறனாளிகளுக்கும் திருநங்கைகளுக்கும் இலவச ஸ்டால்கள் கொடுத்திருக்கிறேன்.

ஆனால் ஒட்டுமொத்தமாக எக்ஸ்போவே நடத்தக்கூடாது என்று சொல்வது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. சிறிய உணவு ஸ்டால்கள் வைத்திருப்பவர்களிடமும் தேவையான சான்றிதழ்கள் இருக்கின்றன.

பெரிய கடைகள் வைத்திருப்பவர்கள் அரசுக்கு வரி கட்டுகிறார்கள் என்பதற்காக அவர்கள் மட்டும்தான் வளர வேண்டுமா? கீழிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருபவர்களை அப்படியே அடித்து உட்கார வைப்பது எந்த வகையில் நியாயம்?

அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என்றால், ‘ஒரு ஸ்டாலுக்கு ரூ.1,000 கட்டுங்கள்’ என்று சொல்லியிருந்தால்கூட கட்டியிருப்போம். 50 ஸ்டால்களுக்கு ரூ.50 ஆயிரம் அரசுக்குச் செலுத்தியிருப்போம். ஆனால் ஒட்டுமொத்தமாக நிகழ்ச்சியையே நடத்தக்கூடாது என்று தடுப்பதுதான் வேதனையாக இருக்கிறது.

அரசியல் ரீதியாகவும் தொடர்ந்து பிரச்சினைகள் வருகின்றன. ஆனாலும் அருண்ராஜ் சார் நிச்சயமாக ஆதரவு கொடுப்பார்; நிகழ்ச்சியை நடத்த உதவுவார் என்று முழுமையாக நம்பினோம்.

நீங்கள் திருச்செங்கோட்டுக்கு மட்டும் அமைச்சர் கிடையாது சார்; தமிழ்நாட்டுக்கே அமைச்சர். எங்களுக்கும் நீங்கள்தானே அமைச்சர்? ஒரே ஒருமுறை எங்களைச் சந்திக்க அனுமதி கொடுத்திருக்கலாமே.

கஷ்டப்படுகிற மக்களின் வாக்குகளால்தான் நாம் எம்.எல்.ஏ. ஆகிறோம். கடை வைக்க முடியாத பலர் இதுபோன்ற ஸ்டால்களை நம்பித்தான் இருக்கிறார்கள். ரூ.2,000, ரூ.3,000 செலவு செய்து பொருட்களையும் உணவுப் பொருட்களையும் தயாரித்து கொண்டு வருகிறார்கள். அவர்களுக்குச் சொந்தமாக கடை கிடையாது. இதுபோன்ற கண்காட்சிகளில்தான் அவர்களால் விற்பனை செய்ய முடியும்.

இதில் எனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை. ஆனால் அந்தச் சிறிய ஸ்டால் உரிமையாளர்களை நினைத்தால்தான் கஷ்டமாக இருக்கிறது.

இவ்வளவு நடந்த பிறகும் என்னுடைய ஓட்டு மட்டுமல்ல, என்னுடைய குடும்பத்தின் ஓட்டும் தவெகவுக்குத்தான் இருக்கும். காரணம் விஜய் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் நல்ல மனிதர் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவ்வாறு பிக்பாஸ் தாமரைச் செல்வி அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share