புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து, முதல்வர் விஜய்க்குத் தெரியாமல் எப்படி அரசாணை வெளிவர முடியும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து இன்று சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “புதிய தலைமைச் செயலகத்தைப் பட்டினப்பாக்கத்தில் அமைப்பது குறித்து, முதல்வர் இறுதியான முடிவு எதையும் எடுக்கவில்லை என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். முதல்வர் இறுதியான முடிவை எடுக்காமல் எப்படி அரசாணை வெளியானது என்ற சாதாரண கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன்.
அரசாணை எண் 564, சீனிவாசபுரத்தில் தலைமைச் செயலகத்தை அமைப்பது என்கின்ற அரசின் முடிவைத்தான் வெளிப்படுத்துகிறது. முதலமைச்சருக்கே தெரியாமல் அரசாணை வெளிவந்திருக்கிறது என்றால், அதற்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது, முதலமைச்சரின் ஒப்புதலோடுதான் வந்துள்ளது என்றால் அது தவறான முடிவு. ஆகவே, இடத்தை மாற்ற வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்துள்ளது. மாற்று இடங்களையும் நாங்கள் தெரிவித்துள்ளோம்.
இது தமிழகம் மற்றும் தமிழக மக்களின் நலனிலிருந்து நாங்கள் வைக்கும் கோரிக்கையே தவிர வேறில்லை. த.வெ.க இல்லாமல் வேறு யார் ஆட்சியில் இருந்தாலும் இதே கோரிக்கையைத்தான் நாங்கள் வைத்திருப்போம். ஆகவே, த.வெ.க-விற்கு எதிரான கோரிக்கையோ, போராட்டமோ இதுவல்ல. தலைமைச் செயலகம், சட்டமன்றம், சட்டமன்ற உறுப்பினர் விடுதி போன்ற நிரந்தரமான கட்டுமானங்கள், பொருத்தமான இடத்தில், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் எல்லோரது விருப்பமும்.
அதற்கான இடங்கள் சென்னை மாநகரத்திற்குள்ளேயே பல இருக்கும்போது, பிடிவாதமாக மீனவர் குடியிருப்புகளைப் பாதிக்கும் வகையில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது என்பது தவறான விஷயம் என்பதை நான் தெரிவித்துள்ளேன். ஆகவே, அந்த அடிப்படையில் ஆதவ் அர்ஜுனா சொல்வது ஏற்புடையது அல்ல. ஏனென்றால், அரசாணை வெளிவந்துள்ளது. அரசாணை வெளிவருகிறது என்றால் முதலமைச்சருக்கோ, சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கோ தெரியாமல் எப்படி வந்திருக்க முடியும்? ஆகவே, முதல்வர் இன்னும் இறுதியான முடிவு எடுக்கவில்லை என்றால், அதை முதலமைச்சரையே சொல்லச் சொல்லுங்கள். ‘புதிய தலைமைச் செயலகம் இங்கு வராது, இது குறித்த விஷயங்கள் ஆய்வில் இருக்கின்றன’ என்று எந்தக் கருத்தும் அரசின் தரப்பிலிருந்து இதுவரை வரவில்லை. எனவே, இதைச் சமாளிப்பதற்காகத்தான் ஆதவ் அர்ஜுனா இப்படித் தெரிவித்துள்ளார்,” என்றார்.
கடந்த திமுக ஆட்சியில் இடதுசாரிகள் பெரிய அளவில் இதுபோன்று போராட்டங்களை நடத்தவில்லை என்று பரவலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், “எல்லா ஆட்சிக் காலத்திலும் எங்கள் எதிர்ப்பு இருந்து வந்துள்ளது. சாம்சங் போராட்டத்தைப் பற்றி அவர்களுக்குத் தெரியுமா? பழைய ‘தீக்கதிர்’ நாளிதழையெல்லாம் அவர்களுக்கு வாசிக்கும் வாய்ப்பு இல்லாமல் போயிருக்கலாம். அப்போது அவர்கள் எங்களோடு களத்தில் இல்லாததன் விளைவாக இது இருக்கலாம். புதிய கட்சி என்பதால் இது போன்ற பிரச்சனைகளில் எல்லாம் அவர்கள் தலையிடாமல் இருந்திருக்கலாம்.
பல்லாவரம் அருகில் அனகாபுத்தூரில் வீடுகள் இடிக்கப்படும்போது, திமுக ஆட்சிக் காலத்தில் நேரடியாகச் சென்று அதைத் தடுத்து நிறுத்துவதற்கான போராட்டத்தை நடத்தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. நானே நேரடியாகச் சென்றேன். அதேபோல், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியில் உயர் நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் குடிசைகள் அப்புறப்படுத்தப்பட்டபோது, அப்போதைய மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேரடியாகக் களத்திற்குச் சென்று, சட்டமன்றத்திலும் அந்தப் பிரச்சனையை எழுப்பி திமுக அரசைத் திக்குமுக்காடச் செய்தார். அதேபோல், சாம்சங் தொழிலாளர் போராட்டம் என்றென்றும் வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் போராட்டம்; உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய போராட்டம். என பல்லாயிரக்கணக்கான போராட்டங்களை திமுக ஆட்சிக் காலத்திலும் நடத்தியிருக்கிறோம்.
இப்போது நான் சொல்ல விரும்புவது, நாங்கள் வைத்திருக்கும் கோரிக்கை நியாயமா, இல்லையா? அவர்கள் பார்க்க வேண்டியது அதைத்தானே தவிர, நாங்கள் இந்த அரசாங்கத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தினோமா, அந்த அரசாங்கத்தை எதிர்த்துப் போராட்டங்களை நடத்தினோமா என்று கேட்பது, பிரச்சனையைத் திசை திருப்பக்கூடிய தந்திரம்தான்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் 8 மணி நேர வேலை நேரத்தை மாற்றியமைக்கும் வகையில் புதிய சட்டத்தைச் சட்டமன்றத்தில் கொண்டு வந்தார்கள். அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள்தான் அறிமுக நிலையிலேயே எதிர்க்கிறோம் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், மற்ற தோழமைக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு வெளிநடப்பு செய்தோம். அனைத்துத் தொழிற்சங்கங்களையும் திரட்டி, அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவில்லை என்றால் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என்பதை முன்னெடுத்ததும் நாங்கள்தான். அதற்குப் பிறகுதான் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற்றார். இதுபோன்று பல விஷயங்களைச் சொல்ல முடியும்,” என்றார்.
த.வெ.க அரசின் மீதான மதிப்பீடு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், “த.வெ.க அரசிடம் இன்னும் ஜனநாயகப்பூர்வமான அணுகுமுறை தேவை. அவர்கள் பல விஷயங்களைத் தன்னிச்சையாக முன்னெடுக்கிறார்கள்; தன்னிச்சையாக அறிவிக்கிறார்கள். ஆளுங்கட்சியாக இருந்தாலும், பல விஷயங்களில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவது, கலந்துரையாடல் நடத்துவது, ஜனநாயகப்பூர்வமான விவாதத்திற்கான வாய்ப்பை உருவாக்குவது என்பதுதான் ஒரு நல்ல அரசுக்கு அழகு. அத்தகைய அணுகுமுறை என்பது அவர்களிடத்தில் இல்லை” என்று தெரிவித்தார்.
