டெல்லியில் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து புதுப்பிக்கும் சிறப்பு தீவிர திருத்தப் பணி (Special Intensive Revision- SIR) நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், தேர்தல் ஆணையர்களில் ஒருவரான எஸ்.எஸ். சந்து உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைநகர் டெல்லியில் வீடு வீடாக வாக்காளர் விவரங்களைச் சரிபார்க்கும் பணி ஜூன் 30-ம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை நடைபெற்றது. வாக்காளர்கள் அளித்த விவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த வரைவு பட்டியலில் சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 33.13 லட்சம் பேரின் விவரங்களில் முரண்பாடுகள் இருப்பதாகவோ அல்லது முந்தைய சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலுடன் அவர்களது விவரங்களை இணைக்க முடியவில்லை என்றோ கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
டெல்லியில் இதற்கு முன்பு 2002-ம் ஆண்டு நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலுடன் தற்போதைய வாக்காளர்களின் விவரங்கள் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றன. தற்போதைய பதிவை 2002 பட்டியலுடன் இணைக்க முடியாதவர்கள், “முந்தைய எஸ்.ஐ.ஆர் பட்டியலுடன் இணைக்கப்படாதவர்கள்” (Unmapped with last SIR) என்ற பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளனர். பெயர், பெற்றோர் பெயர் உள்ளிட்ட விவரங்களில் வேறுபாடுகள் இருந்தாலும் தனியாக நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
அத்வானிக்கு நோட்டீஸ்
98 வயதான முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி, அவரது மகள் பிரதிபா அத்வானி, மருமகள் கீதிகா ஆகியோரது தற்போதைய வாக்காளர் பதிவுகளை 2002 எஸ்.ஐ.ஆர் வாக்காளர் பட்டியலுடன் இணைக்க முடியாததால் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் அத்வானியின் மகன் ஜெயந்தின் விவரங்கள் முந்தைய பட்டியலுடன் பொருந்தியுள்ளன. இவர்கள் அனைவரும் புதுடெல்லி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் அவரது மனைவி கியோகோ ஜெய்சங்கர் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் புதுடெல்லி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுனேஹ்ரி பாக் பகுதியில் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் அவரது மனைவி சுதேஷ் ஆகியோருக்கும் எஸ்.ஐ.ஆர் தொடர்பான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் ஆணையருக்கும் நோட்டீஸ்
இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையர்களில் ஒருவரான டாக்டர் சுக்பீர் சிங் சந்து (எஸ்.எஸ். சந்து)வுக்கும், வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் தொடர்பாக ஏற்பட்ட பொருத்தமின்மை காரணமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
எஸ்.எஸ். சந்துவின் மகன் தமன்பீருக்கும் பெற்றோர் பெயர் தொடர்பான பொருத்தமின்மை காரணமாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் டெல்லி கண்டோன்மென்ட் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள்.
யார் யாருக்கு நோட்டீஸ்?
இவர்களைத் தவிர, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளவர்கள் பட்டியலில் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) தலைவர் துஹின் காந்த பாண்டே, பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அஜய் குமார் சூட், சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட், அவரது மனைவி வனிதா சூட், தாயார் கமலேஷ் சூட், முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, அவரது மனைவி சுனிதா திவேதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, அவரது மனைவி சீமா சிசோடியா, மகன் மீர் சிசோடியா, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா தேசாய், அவரது குடும்பத்தைச் சேர்ந்த பிரகாஷ் தேசாய், மைக் தேசாய், சாக்ஷி தேசாய், சிபிஎம் எம்.பி. ஜான் பிரிட்டாஸின் மனைவி ஷீபா பிரிட்டாஸ், மகன் ஆனந்த் பிரிட்டாஸ், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா, மத்திய மீன்வளத்துறை செயலாளர் அபிலக்ஷ் லிகி, இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் கே. சஞ்சய் மூர்த்தி ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் ஆணையத்தின் விளக்கம் என்ன?
இதுதொடர்பாக டெல்லி தலைமை தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளிக்கையில், எஸ்.ஐ.ஆர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பதற்காக சம்பந்தப்பட்ட வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து தானாக நீக்கப்படும் என்று பொருள் இல்லை. வாக்காளருக்கு விளக்கம் அளிக்கவும், தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதன் பிறகே உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
