போர்ட் டால்பட் திட்டத்தில் தாமதம்: இங்கிலாந்து அரசிடம் கூடுதல் நிதி கேட்கும் டாடா ஸ்டீல்

Published On:

| By Kavi

இங்கிலாந்தின் போர்ட் டால்பட் எஃகு ஆலையை நவீனமயமாக்கும் திட்டத்தில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், டாடா ஸ்டீல் நிறுவனம் அந்நாட்டு அரசிடம் கூடுதல் நிதியுதவி கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கோரிக்கை, ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள 500 மில்லியன் பவுண்ட் அரசின் மானியத்துக்கு கூடுதலானதாகும்.

tata steel port talbot

போர்ட் டால்பட் ஆலையில் பழைய முறையிலான எஃகு உற்பத்திக்கு பதிலாக Electric Arc Furnace (EAF) அமைக்க டாடா ஸ்டீல் திட்டமிட்டுள்ளது. இதற்காக மொத்தம் 1.25 பில்லியன் பவுண்ட் முதலீடு செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

புதிய உலை 2028 தொடக்கத்தில் செயல்பாட்டுக்கு வரும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆலையை மின்சாரக் கட்டமைப்புடன் இணைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, திட்டம் தற்போது 2028 இறுதி அல்லது 2029 தொடக்கத்தில்தான் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நூற்றுக்கணக்கான மில்லியன் பவுண்ட் தேவை?

தாமதத்தால் கட்டுமானச் செலவுகள் அதிகரிப்பதுடன், புதிய உலை செயல்பாட்டுக்கு வராத காலத்தில் ஏற்படும் வருவாய் இழப்பும் திட்டத்தின் மொத்தச் செலவை உயர்த்தும் என டாடா ஸ்டீல் கணக்கிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கூடுதல் நிதியாக எவ்வளவு தொகை கோரப்பட்டுள்ளது என்பது இன்னும் தெளிவாகவில்லை. எனினும், இந்தத் தொகை பல நூறு மில்லியன் பவுண்டுகளாக இருக்கலாம் என தெரிகிறது.

2,500 பணியிடங்கள் ஏற்கெனவே பாதிப்பு

ADVERTISEMENT

போர்ட் டால்பட் ஆலையின் இறுதி blast furnace கடந்த 2024-ம் ஆண்டு மூடப்பட்டது. ஆலையின் மாற்றுத் திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 2,500 பணியிடங்கள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், புதிய EAF திட்டம் மூலம் இங்கிலாந்தில் எஃகு உற்பத்தியைத் தொடர்ந்து வைத்திருப்பதுடன், குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட உற்பத்தி முறைக்கு மாறுவது நோக்கமாக உள்ளது.

இங்கிலாந்தின் எஃகு துறை மலிவான இறக்குமதிகள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், டாடா ஸ்டீலின் கூடுதல் நிதி கோரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது. இங்கிலாந்து அரசு ஏற்கெனவே எஃகு துறைக்கு பல்வேறு வழிகளில் ஆதரவு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share