மதுரை கும்பாபிஷேகம்.. பிளாக் டிக்கெட் விற்பது மாதிரி பாஸ்.. அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு!

Published On:

| By Mathi

Annamalai-Madurai

மதுரை வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்களை கவுரவிக்கும் வகையில், We The Leaders அமைப்பு சார்பில் வைகை சிற்பி விருது வழங்கும் விழா மதுரையில் இன்று செப்டம்பர் 20-ந் தேதி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற We The Leaders அமைப்பின் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: மதுரையில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டுதான் இளைஞர்களைச் சீரழிக்கிறது என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். ஆனால் அதே கட்சி தேர்தல் அறிக்கை கொடுக்கும்போது ஜல்லிக்கட்டை சர்வதேச விளையாட்டாகத் தரம் உயர்த்தப் பாடுபடுவோம் என்று சொல்கிறது.

ADVERTISEMENT

அந்தக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றத்தில் எழுந்து, மதுரையில் ஜல்லிக்கட்டால் இளைஞர்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள் என்று பேசுகிறார். நாங்கள் அரசியல் பேச வேண்டும் என்று சொல்கிறீர்கள். பேசுகிறோம். நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்; திருத்திக் கொள்ளுங்கள்; தவறு செய்யாதீர்கள். இதுபோன்ற வார்த்தைகளைச் சட்டமன்றத்தில் பயன்படுத்தாதீர்கள்.

நாட்டு மாடுகளைக் காப்பாற்றும் ஜல்லிக்கட்டு

இன்று நாட்டுமாடுகளை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்திற்கு மிகப்பெரிய உந்துதல் இங்கு நடக்கும் ஜல்லிக்கட்டுதான். மதுரைக்கும் ஜல்லிக்கட்டுக்கும் மிக நீண்ட பாரம்பரியம் இருக்கிறது.

ADVERTISEMENT

அந்தக் காலத்தில் மாட்டின் கொம்பில் சல்லிக்காசைக் கட்டுவார்கள். யார் அந்த மாட்டை அடக்குகிறார்களோ அவர்கள் அந்தச் சல்லிக்காசை எடுத்துக் கொள்ளலாம். அந்தச் சல்லிக்காசு சல்லிக்கட்டாகி, பின்னர் ஜல்லிக்கட்டு என்ற பெயராக மாறியது. நமது பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

மதுரை மக்கள் ஓட்டு போட்டு வெற்றி பெற்ற ஒரு சட்டமன்ற உறுப்பினர் இப்படிப் பேசினால் மதுரை மக்களை மட்டுமல்ல, தமிழக மக்களையே காயப்படுத்துவதற்குச் சமம்.

ADVERTISEMENT

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேகமே அதற்கு ஒரு சாட்சி. 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடந்தது. அந்தக் கும்பாபிஷேகத்தை அரசு எப்படி நடத்தியது?

சினிமாவில் பிளாக் டிக்கெட் விற்பது மாதிரி இருந்தது. ஒரு கலர் பாஸ் வாங்கினால் இங்கே, இன்னொரு கலர் வாங்கினால் அங்கே. VIP-க்கள் மட்டும் உட்கார்ந்திருந்தார்கள். மதுரை மக்கள் எங்கே இருந்தார்கள்?

மாடவீதியை VVIP வாகனங்களை நிறுத்துவதற்காகவா வைத்திருக்கிறோம்?
பொதுமக்கள் எங்கே இருந்தார்கள்? தீர்த்தம் எத்தனை பேருக்கு கிடைத்தது? காவல்துறையினர் பாதுகாப்புப் பணிக்காக இருக்கிறார்களா அல்லது தண்ணீரை எடுத்துத் தெளிப்பதற்காக இருக்கிறார்களா? இதுபோன்ற ஒவ்வொரு நிகழ்வும் ஏன் இந்து அறநிலையத்துறை இருக்கக்கூடாது என்று நாம் சொல்வதற்கான உதாரணமாக இருக்கிறது.

செல்போன்களுக்கு தடை

நான் சினிமா தியேட்டரில் படம் பார்க்கப் போகிறேன். இன்னொருவருடைய செல்போன் ஒலிப்பதால் எனக்குப் பிரச்சினை வருகிறது என்பதற்காக தியேட்டரில் இருக்கிற எல்லோருடைய செல்போனையும் பறித்து வைக்க முடியுமா? அதேபோல ஒரு திருமண மண்டபத்தில் 5,000 பேர் இருக்கிறார்கள் என்றால் எல்லோருடைய செல்போனையும் வாங்கி வைக்க முடியுமா? அது நியாயம் கிடையாது.

கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கையை இதுபோன்ற நடவடிக்கைகள் குறைத்துவிடும். கோவிலுக்குள் போய், செல்போனைக் கொடுத்து, டோக்கன் வாங்கி, திரும்ப வந்து செல்போனை வாங்குவதற்குப் பதிலாக வெளியிலிருந்தே கும்பிட்டுவிட்டுப் போகலாம் என்ற எண்ணம் வந்துவிடும்.

இந்து மக்களுக்கும் குரல் கொடுப்போம். மற்ற சமூகங்களுக்கும் குரல் கொடுப்போம். நம்முடைய இயக்கம் எல்லோருக்குமான இயக்கமாக இருக்கும்.

சட்டசபையில் மதங்களை வெளிப்படுத்துவதா?

நமக்கு எல்லா மதங்களும் சமம். பகவத் கீதைக்கும் உரிமை இருக்கிறது; பைபிளுக்கும் உரிமை இருக்கிறது; குர்ஆனுக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் சட்டமன்றத்தில் பேச வேண்டிய விஷயம் என்ன?

சபாநாயகர் தொடங்கி ஒவ்வொரு எம்எல்ஏவும் போட்டி போட்டுக்கொண்டு எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காட்டுவதற்கான இடமாகச் சட்டமன்றம் போய்விடக்கூடாது. மக்களுடைய பிரச்சினைகளைப் பேசுவதற்குத்தான் சட்டமன்றம். எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதைக் காட்டுவதற்காகவா சட்டமன்றம்? இதையும் நாம் சுட்டிக்காட்டுவோம்; பேசுவோம்.

ஸ்ரீரங்கம் பெரியார் கல்வெட்டு

செப்டம்பர் 17 பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள். நாம் வாழ்த்து தெரிவிப்போம். அரசு தவறு செய்யும்போது கேள்வி கேட்கிறோம். மும்மொழிக் கொள்கை தொடர்பாகக் கேள்வி கேட்டோம். நீட் தொடர்பாகவும் சில கேள்விகளைக் கேட்டோம். இனியும் கேட்போம்.

ஆனால் மோடியைப் பொறுத்தவரை குடும்பம் இல்லாமல் நாட்டுக்காக உழைக்கிறார். அவருக்கான மரியாதையையும் பெருமையையும் கொடுப்போம்.

அதே செப்டம்பர் 17 தந்தை பெரியாருடைய பிறந்த நாள். 2020 செப்டம்பர் 17-ஆம் தேதி நான் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டனாக இருந்தபோது, அப்போதைய தலைவர் முருகன் அவர்கள் பெரியாருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதை விமர்சித்தார்கள். அப்போதே நான் முருகன் அவர்கள் சொன்னது சரிதான் என்று அவருக்கு ஆதரவாகப் பதிவு போட்டேன்.

இன்று நாம் அரசியல் இயக்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். எல்லா மக்களுக்குமான அரசியல் கட்சியை நடத்தப் போகிறோம். பெரியார் அவர்களை முழுமையாக நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

பெண்கள் விடுதலைக்காகப் பேசினார்- ஏற்றுக்கொள்கிறோம்; சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசினார்- ஏற்றுக்கொள்கிறோம்; ஆனால் பெரியாருடைய கடவுள் மறுப்புக் கொள்கையை நான் ஏற்கமாட்டேன்.

பெரியாருடைய வரலாற்றை முழுமையாகப் படிக்கும்போது பல முரண்பாடுகள் இருக்கின்றன. ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வெளியே கடவுள் மறுப்பு வாசகம் இருக்கிறது. கடவுளை நம்பாதவர்கள் அந்தக் கருத்தைப் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் கடவுளை நம்புகிறவர்கள் கோவிலுக்குச் செல்லும் வாசலில் அதை ஏன் வைக்க வேண்டும்? அதை ஒரு பொதுவான இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.

இதற்கான வரலாற்றையும் ஆவணங்களையும் படித்திருக்கிறோம். 1969-ல் தொடங்கி நகராட்சி அனுமதி, மாவட்ட நிர்வாகம், மாநில அரசு எனப் பல கட்டங்களைக் கடந்து நிலம் வழங்கப்பட்டிருக்கிறது. இதை மைக் பிடித்துப் பேசிவிட்டு மட்டும் மாற்ற முடியாது.

ஆட்சிக்கு வந்தால் அந்த அரசாணையை எப்படி ரத்து செய்வது, அந்த நிலத்தை எப்படி மீண்டும் அரசு நிலமாக மாற்றுவது என்பதற்கான நடைமுறையைப் பின்பற்றித்தான் செய்ய வேண்டும். எதையும் சட்டப்படி செய்ய வேண்டும்.

விரைவில் அரசியல் இயக்கம்

நான் நினைத்ததைவிட அந்தக் காலம் மிக வேகமாக வந்து கொண்டிருக்கிறது. 234 தொகுதிகளிலும் நம்முடைய அமைப்பு கீழே வரை சென்றிருக்க வேண்டும்; தலைவர்கள் உருவாக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நான் நினைத்ததைவிட வேகமாக அது நடந்து கொண்டிருக்கிறது. மிக விரைவில் இது அரசியல் இயக்கமாக மாறத்தான் போகிறது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share